மின்சார கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தூத்துக்குடி வர்த்தக சங்கம் கோரிக்கை
தமிழக அரசு உத்தேசித்து உள்ள மின்சார கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது.
தூத்துக்குடி, ஆக.20-
தமிழக அரசு உத்தேசித்து உள்ள மின்சார கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது.
இதுகுறித்து சங்க தலைவர் தமிழரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் மின்கட்டணங்களை ஒரு யூனிட்டுக்கு 27.50 பைசா முதல் ரூ.1.35 வரை உயர்த்தப் போவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. மின்சார பயன்பாட்டின் அடிப்படையில் சில பிரிவினருக்கு 52 சதவீதம் வரை கட்டணம் உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் மிகவம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இந்த கட்டண உயர்வால் இலவச மின்சாரம் பெறுவோர் தவிர மற்ற அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள். இருமாதங்களுக்கு 200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோர் ஒரு யூனிட்டுக்கு 27.50 காசுகள் கூடுதலாக செலுத்த வேண்டும். இது 32.35 சதவீதம் உயர்வு ஆகும். 500 யூனிட் வரை பயன்படுத்துபவர்கள் ஒரு யூனிட்டுக்கு ரூ.1.19-ம், 900 யூனிட் வரை பயன்படுத்துவோர் ஒரு யூனிட்டுக்கு 1.25 வரையும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். மொத்தம் முறையே ரூ.595, ரூ.1130 கூடுதலாக செலுத்த வேண்டும். தமிழக வரலாற்றில் இதுவரை இந்த அளவுக்கு மின்கட்டணம் உயர்த்தப்படவில்லை.
அனைத்து பிரிவினருக்கும் சராசரியாக 20 சதவீதம் அளவுக்கும், அதிகபட்சமாக 52 சதவீதமும் மின்சார கட்டணத்தை உயர்த்துவது நியாயமற்றது. இந்த கட்டண உயர்வு பொதுமக்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் மின்கட்டண உயர்வு சிறு, குறு தொழில் செய்வோர், தொழில் முனைவோர் மற்றும் ஏனைய எல்லா துறைகளும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் அரசு உத்தேசித்து உள்ள மின்கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.