ரெயில் முன் பாய்ந்து மின்வாரிய ஊழியர் தற்கொலை
பணகுடி அருகே மின்வாரிய ஊழியர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
நாகர்கோவில்:
பணகுடி அருகே மின்வாரிய ஊழியர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
மின்வாரிய ஊழியர்
நெல்லை மாவட்டம் பணகுடி ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாள பகுதியில் நேற்று காலை ஒரு ஆண் பிணம் காயங்களுடன் கிடந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் பிணமாக கிடந்தவர் யார்? அவர் எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்த கணேசன் மகன் முருகப்பெருமாள் (வயது 49) என்பது தெரியவந்தது. இவர் ஆவரைகுளம் பெருங்குடி பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்றுமுன்தினம் இரவு மோட்டார் சைக்கிளை அங்கேயே நிறுத்தி விட்டு தண்டவாளம் பகுதியில் நடந்து சென்றுள்ளார்.
தற்கொலை
அப்போது அந்த வழியாக ராமேசுவரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. இந்தநிலையில் திடீரென முருகப்பெருமாள் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
குடும்ப பிரச்சினை காரணமாக முருகப்பெருமாள் இந்த விபரீத முடிவை தேடிக் கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.