மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலி
கருங்கல் அருகே பராமரிப்பு பணியில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.
கருங்கல்:
கருங்கல் அருகே பராமரிப்பு பணியில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.
மின்வாரிய ஊழியர்
கருங்கல் அருகே உள்ள தொலையாவட்டம் கண்ணன்விளை பகுதியைச் சேர்ந்தவர் லாரன்ஸ். இவருக்கு அனிஷ் (வயது27) என்ற மகனும், இரண்டு மகள்களும் இருந்தனர்.
இதில் அனிஷ் மின்சார வாரியத்தில் கடந்த 2½ ஆண்டு பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.
இந்த நிலையில் அனிஷ் கடந்த 12-ந்தேதி கல்லுவிளை பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக அனிசை மின்சாரம் தாக்கியது.
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பரிதாப சாவு
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு அனிஷ் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி கருங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அனிசின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.