போலீஸ் நிலையம் முன்பு தீக்குளித்த மின்வாரிய ஊழியர் பலி
செய்யாறில் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளித்த மின்வாரிய ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
செய்யாறு
செய்யாறில் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளித்த மின்வாரிய ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
தீக்குளிப்பு
வெம்பாக்கம் தாலுகா தென்னம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வினோத் (வயது 34), இவர் மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார்.
இவரது மனைவி அதே கிராமத்தை சேர்ந்த தாந்தோணி (28) என்பவர் மீது செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சோனியா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில் வினோத் நேற்று செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று மனைவியின் புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் நகல் கேட்டுள்ளார்.
அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார் இன்ஸ்பெக்டர் ரோந்து பணியில் சென்றுள்ளதால் சிறிது நேரம் காத்திருக்கும்படி கூறியதாக கூறப்படுகிறது.
அப்போது மனைவி கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கவில்லை என ஆத்திரமடைந்த வினோத் போலீஸ் நிலையம் முன்பு உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார்.
சிகிச்சை பலனின்றி சாவு
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக அருகில் இருந்த மணலை வினோத் உடல் மீது வீசி தீயை அணைத்தனர். அதற்குள் வினோத்தின் உடல் முழுவதும் தீக்காயங்கள் ஏற்பட்டது.
உடனடியாக அவரை செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.