மின் ஊழியர்கள் 22-ந்தேதி தர்ணாவில் ஈடுபட முடிவு


மின் ஊழியர்கள் 22-ந்தேதி தர்ணாவில் ஈடுபட முடிவு
x
தினத்தந்தி 19 Jun 2023 12:00 AM IST (Updated: 19 Jun 2023 12:43 PM IST)
t-max-icont-min-icon

கேங்மேன் கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர்கள் 22-ந்தேதி தர்ணாவில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

பெரம்பலூர்

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பெரம்பலூர் வட்ட கிளையின் சிறப்பு பேரவை நேற்று நடந்தது. பேரவைக்கு அமைப்பின் வட்ட தலைவர் அகஸ்டின் தலைமை தாங்கினார். இதில் மாநில செயலாளர் கோவிந்தராஜ் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் மின் ஊழியர் மத்திய அமைப்பு கையெழுத்திடவில்லை ஏன்? என்பதனை விளக்கி பேசினார். கேங்மேன் ஊழியர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக வருகிற 22-ந்தேதி மாலை 5.20 மணிக்கு பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தப்படும். பல ஆண்டுகளாக பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு வாரியமே தினக்கூலி வழங்கிடக்கோரி முதல்-அமைச்சருக்கு, மாவட்ட கலெக்டர் மூலமாக அடுத்த மாதம் (ஜூலை) 4-ந்தேதி மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்படும். விசாகா கமிட்டி அமைத்திட வேண்டும். குழந்தைகள் காப்பகம் அமைத்திட வேண்டும். பெண்கள் பணியாற்றும் இடங்களில் கழிப்பிட வசதிகள் அமைத்திட வேண்டும். மேல் அலுவலர்களால் கீழ்மட்ட பெண் ஊழியர்களை தரக்குறைவாக பேசுவதை கைவிட வேண்டும். அடையாளம் காணப்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கிட வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். வாரிய ஆணை எண் 2/2022-ஐ முழுமையாக ரத்து செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் பேரவையில் நிறைவேற்றப்பட்டன.


Next Story