பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய ஊழியர்கள் சாலைமறியல்


பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய ஊழியர்கள் சாலைமறியல்
x

பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய ஊழியர்கள் சாலைமறியல்

தஞ்சாவூர்

ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி மின் வாரிய ஊழியர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

பல ஆண்டுகளாக பணி புரியும் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு தஞ்சை கிளை சார்பில், தஞ்சாவூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநிலச் செயலாளர் எஸ்.ராஜாராமன் தலைமை தாங்கினார்.. சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைத் தலைவர் கோவிந்தராஜு, மாவட்ட துணைச் செயலாளர் அன்பு, மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்டத் தலைவர் அதிதூத மைக்கேல் ராஜ், வட்டச் செயலாளர் பி.காணிக்கை ராஜ், வட்டப் பொருளாளர் எஸ்.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

"நீண்ட காலமாக பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசும், மின்வாரியமும் அறிவித்தபடி ரூ.380-ஐ அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும். கே-2 மற்றும் அக்ரிமெண்டில் பல ஆண்டுகாலம் பணி செய்த ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு காலியாக உள்ள பணியிடங்களில் பணி நியமனம் செய்ய வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வருகைப் பதிவேடு பராமரிக்க வேண்டும். மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் இல்லை என்ற பொய்யான அறிக்கை அனுப்புவதைக் கைவிட்டு, பணி சான்றிதழ் வழங்க வேண்டும்.

ஊதிய உயர்வு, வேலைப்பளு பேச்சுவார்த்தையில் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை பேசி தீர்வு காண வேண்டும்" என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் நிர்வாகிகள் ரவி, அறிவழகன், சேக் அகமது, காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.


Next Story