பெண் ஊழியர் தாக்கப்பட்டதை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்
நாகர்கோவிலில் பெண் ஊழியர் தாக்கப்பட்டதை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடசேரி:
நாகர்கோவிலில் பெண் ஊழியர் தாக்கப்பட்டதை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண் ஊழியர் தாக்கப்பட்டார்
நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் டோனி. இவர் நேற்று முன்தினம் மதியம் வடசேரியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின்கட்டணம் செலுத்துவதற்காக சென்றிருந்தார். அப்போது அங்குள்ள மின் கட்டண கணினி வசூல் மையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பெல்சியா என்ற ஊழியரிடம் டோனி வாய்த்தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
அப்போது வடசேரி மின்வாரிய கிருஷ்ணன்கோவில் பிரிவு அலுவலக உதவி பொறியாளராக பணியாற்றி வரும் கவிதா (வயது 44) என்பவர் டோனியை சமாதானப்படுத்தியபோது அவரை தாக்கியதாக தெரிகிறது. மேலும் கணினி வசூல் மைய கண்ணாடியை உடைத்ததில் அது சிதறி கவிதாவின் வலது கையில் பட்டு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கண்டன ஆர்ப்பாட்டம்
இதை தொடர்ந்து அவர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்தநிலையில் டோனி அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றதாக தெரிகிறது.
இதுகுறித்து அரசு ஊழியரை பணி செய்ய விடமாமல் தடுத்து, மிரட்டியது உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் டோனி மீது வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தை கண்டித்து நேற்று நாகர்கோவில் வடசேரியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ேநற்று அனைத்து தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விஜயகுமார் தலைமை தாங்கினார். இதில் மின்வாரிய பணியாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும், பெண் ஊழியரை தாக்கி காயப்படுத்திய நபரை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.