கொட்டிய மழையில் மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
அகவிலைப்படி உயர்வை வழங்க வலியுறுத்தி கொட்டிய மழையில் மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டது.
காத்திருப்பு போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் வட்டக்கிளை தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது. பெரம்பலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் நடந்த இந்த காத்திருப்பு போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் அகஸ்டின் தலைமை தாங்கினார். மின்வாரிய ஊழியர்கள், பொறியாளர்கள், அலுவலர்கள் சுமார் 800-க்கும் மேற்பட்டோர் நேற்று தங்களது பணிக்கு செல்லாமல் இந்த காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
பணப்பலன்கள், உரிமைகளை பறிக்கக்கூடிய...
அவர்கள் தங்களது பணப்பலன்கள், உரிமைகளை பறிக்கக்கூடிய மின்வாரிய ஆணை எண் 2-ஐ முழுமையாக ரத்து செய்திட வேண்டும். புதிய பதவிகளை அனுமதிக்க ஏற்கனவே உள்ள பதவிகளை ரத்து செய்யக்கூடிய மறுபகிர்வு முறை, துணை மின்நிலையங்களை தனியாருக்கு கொடுக்ககூடிய அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும். அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். அப்போது மழை பெய்தது. ஆனால் கொட்டும் மழையையும் பாராமல் அவர்களில் பலர் மழையில் நனைந்தவாறும், சிலர் குடை பிடித்தப்படியும் காத்திருப்பு போராட்டத்தில் தொடர்ந்து கலந்து கொண்டனர்.
பணிகள் பாதிப்பு
காத்திருப்பு போராட்டத்தில் தமிழ்நாடு மின்வாரிய ஊழியர் மத்திய அமைப்பு, தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம், தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் கழகம், தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் சங்கம், ஏ.இ.எஸ்.யு. தொழிற்சங்கம், சென்னான் தொழிலாளர் சம்மேளனம், தொழிலாளர் முன்னேற்ற சங்கம், மின்சார பிரிவு அண்ணா தொழிற்சங்கம் ஆகிய சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.மின்வாரிய ஊழியர்கள், பொறியாளர்கள், அலுவலர்களின் காத்திருப்பு போராட்டத்தினால் மின்வாரியத்தில் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த போராட்டம் இரவு வரை நீடித்தது.