நெல்லை -தென்காசி ரெயில் பாதையில் மின்மயமாக்கும் பணி முடிவடைந்தது; 13-ந்தேதி ஆய்வு நடத்த அதிகாரிகள் ஏற்பாடு
நெல்லை -தென்காசி ரெயில் மின்பாதை அமைக்கும் பணி முடிவடைந்தது. இந்த பாதையில் வருகிற 13-ந்தேதி (திங்கட்கிழமை) அதிகாரிகள் ஆய்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
நெல்லை -தென்காசி ரெயில் மின்பாதை அமைக்கும் பணி முடிவடைந்தது. இந்த பாதையில் வருகிற 13-ந்தேதி (திங்கட்கிழமை) அதிகாரிகள் ஆய்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
மின்பாதை வசதி
இந்திய ரெயில்வே நாடு முழுவதும் உள்ள மீட்டர் கேஜ் பாதைகளை அகற்றிவிட்டு அகல ரெயில் பாதை அமைத்து உள்ளது. இதேபோல் ரெயில்களை வேகமாக இயக்கவும், எரிபொருள் செலவை குறைக்கவும் மின்சார பாதைகள் அமைத்து மின்சார என்ஜின்கள் மூலம் ரெயில்களை இயக்கி வருகிறது.
இதில் விடுபட்ட பகுதிகளுக்கு மின் பாதை அமைக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நெல்லை சந்திப்பில் இருந்து திருச்செந்தூர் வரை ரெயில் மின்பாதை அமைக்கப்பட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டது. அந்த பாதையில் விரைவில் மின்சார என்ஜின் மூலம் ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
நெல்லை -தென்காசி
இதேபோல் நெல்லையில் இருந்து தென்காசி வரை 74 கிலோ மீட்டர் தூரத்துக்கு மின்பாதை அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வந்தது. அந்த பணி தற்போது இறுதி கட்டத்தை எட்டி முடிவடைந்துள்ளது.
இந்த பாதையில் மணிக்கு 121 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில்களை இயக்கி நேற்று சோதனை நடத்தப்பட்டது. இந்த வேகத்தை மின்சார ரெயில் என்ஜின்கள் மூலம் எளிதாக எட்ட முடியும் என்பதால் விரைவில் இந்த பாதையில் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.
இதற்காக வருகிற 13-ந்தேதி (திங்கட்கிழமை) ரெயில்வே பொறியியல் மற்றும் மின்சார பிரிவு அதிகாரிகள், மின் பாதை சரியாக அமைக்கப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. அந்த வழித்தடத்தில் உள்ள மின் நிலையங்களையும் திறந்து வைக்கிறார்கள். மேலும் மின்சார ரெயில் என்ஜினை கொண்டு சோதனை ஓட்டமும் நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்காசி -விருதுநகர்
இதுதவிர தென்காசி -விருதுநகர் மற்றும் செங்கோட்டை -எடமண் (கேரளா) இடையே மின்பாதை அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. இந்த பாதைகளிலும் இந்த மாத இறுதிக்குள் மின்சார ரெயில் என்ஜின் மூலம் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. அதை தொடர்ந்து நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அனைத்து ரெயில் பாதைகளிலும் மின்சார ரெயில்களே இயக்கப்பட உள்ளது.