தேங்கி நின்ற மழைநீரில் மின்கசிவு: நடந்து சென்ற பெண் மின்சாரம் தாக்கி சாவு


தேங்கி நின்ற மழைநீரில் மின்கசிவு: நடந்து சென்ற பெண் மின்சாரம் தாக்கி சாவு
x

தேங்கி நின்ற மழைநீரில் மின்கசிவு ஏற்பட்டு இருப்பது தெரியாமல் அதில் நடந்து சென்ற பெண் மின்சாரம் தாக்கி பலியானார்.

பெரம்பூர்,

சென்னை வியாசர்பாடி பக்தவச்சலம் காலனி 19-வது தெரு சஞ்சய் நகரைச் சேர்ந்தவர் செல்வம். இவருடைய மனைவி உமாராணி (வயது 50). நேற்று முன்தினம் இரவு அருகில் உள்ள கடைக்கு மளிகை பொருட்கள் வாங்க சஞ்சை நகர் 2-வது தெரு வழியாக நடந்து சென்றார்.

கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் அந்த தெருவில் மழைநீர் தேங்கி நின்றது. அருகில் உள்ள மின்கம்பத்தில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு, தேங்கி நின்ற மழைநீரில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது.

மின்சாரம் தாக்கி பலி

அது தெரியாமல் உமாராணி, தேங்கி நின்ற மழைநீரில் நடந்து சென்றார். அப்போது அவரை மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், உமாராணி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தங்கள் பகுதியில் அடிக்கடி இதுபோல் மழை நேரத்தில் மின்கசிவு ஏற்பட்டு பாதிக்கப்படுவதாகவும், இதனை தடுக்க மின்சார வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த பகுதி பொதுமக்கள் வலியுறுத்தினர்.

மற்றொரு சம்பவம்

கொளத்தூர் தெற்கு மாட வீதியை சேர்ந்தவர் இளையராஜா(43). வெல்டரான இவர், நேற்று முன்தினம் இரவு கொளத்தூர் யுனைடெட் காலனி பகுதியில் வெல்டிங் வேலை செய்து கொண்டு இருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் இளையராஜா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story