வேப்பனப்பள்ளி பகுதிகளில் அட்டகாசம் செய்த யானைகள் விரட்டியடிப்பு
வேப்பனப்பள்ளி பகுதிகளில் அட்டகாசம் செய்து வந்த யானைகள் கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டி அடிக்கப்பட்டன.
வேப்பனப்பள்ளி:
யானைகள் அட்டகாசம்
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கொங்கனப்பள்ளி, மகராஜகடை, பதிமடுகு உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகின்றன. இதில் இருந்து பிரிந்்து வந்த 11 யானைகள் கொங்கனப்பள்ளி, எப்ரி வனப்பகுதியில் முகாமிட்டு வந்தன.
இதனால் விவசாயிகள் இரவு நேரங்களில் நிலங்களுக்கும், வனப்பகுதிக்கு ஆடுகள், மாடுகள் மேய்க்கவும் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து வந்தனர். மேலும் வனத்துறையினர் யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.
விரட்டி அடிப்பு
இந்த நிலையில் காட்டு யானைகளை 30 பேர் கொண்ட தமிழக வனத்துறை ஊழியர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் இந்த யானைகள் வனப்பகுதிகளில் பதுங்கி கொண்டு இரவு நேரங்களில் பயிர்களை சேதப்படுத்த வந்தன. இதனிடையே நேற்று முன்தினம் இரவு 11 யானைகளையும் தமிழக வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து கர்நாடக வனப்பகுதியில் விரட்டி அடித்தனர். இதனால் கிராமமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த யானைகள் மீண்டும் தமிழக வனப்பகுதிக்கு வராதவாறு வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.