ஆசனூர் அருகே பரபரப்பு: கிழங்கு ஏற்றி வந்த வேனை அடித்து நொறுக்கிய யானைகள்- வெளியே குதித்து டிரைவர் உயிர்தப்பினார்


ஆசனூர் அருகே  பரபரப்பு: கிழங்கு ஏற்றி வந்த வேனை அடித்து நொறுக்கிய யானைகள்- வெளியே குதித்து டிரைவர் உயிர்தப்பினார்
x

ஆசனூர் அருகே கிழங்கு ஏற்றி வந்த வேனை யானைகள் அடித்து நொறுக்கின. அப்போது டிரைவர் வெளியே குதித்து உயிர் தப்பினார்.

ஈரோடு

தாளவாடி

ஆசனூர் அருகே கிழங்கு ஏற்றி வந்த வேனை யானைகள் அடித்து நொறுக்கின. அப்போது டிரைவர் வெளியே குதித்து உயிர் தப்பினார்.

கரும்புக்காக...

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தின் வழியாக திண்டுக்கல்லில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையை யானைகள் குட்டிகளுடன் அவ்வப்போது கடந்து செல்வது வழக்கம்.

சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு பாரம் ஏற்றிச்செல்லும் லாரி டிரைவர்கள், யானைகளுக்காக கரும்பு கட்டுகளை ரோட்டோரம் வீசிச்செல்வார்கள். அதனால் நாள்தோறும் கரும்புகளை தின்று ருசிபார்த்த யானைகள், கரும்பு பாரம் ஏற்றிவரும் லாரிகளுக்காக நெடுஞ்சாலை ஓரம் காத்திருக்கின்றன. அவ்வாறு கரும்பு ஏற்றிய லாரிகள் வரவில்லை என்றால் ஆவேசம் அடைந்து மற்ற வாகனங்களை துரத்தும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

கண்ணாடியை உடைத்தது

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் இருந்து ஈரோட்டுக்கு சர்க்கரைவள்ளி கிழங்குகளை ஏற்றிக்கொண்டு நேற்று ஒரு வேன் சென்றது. மாலை 5 மணி அளவில் ஆசனூர் தேசிய நெடுஞ்சாலையில் வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது வனப்பகுதியில் இருந்து ரோட்டுக்கு வந்த யானைகள் திடீரென வேனை மறித்தன.

பின்னர் வேனின் பின்பக்கம் சென்று, கரும்பு உள்ளதா? என்று பார்த்தன. கரும்பு இல்லாததால் ஆவேசம் அடைந்து வேனை அடித்து நொறுக்க தொடங்கின. உடனே வேனின் டிரைவர் கதவை திறந்து வெளியே குதித்து தப்பி ஓடினார். அப்போது ஒரு யானை முன்பக்கத்துக்கு வந்து கண்ணாடியை துதிக்கையால் அடித்து உடைத்தது.

விரட்ட வேண்டும்

அதன்பின்னர் சர்க்கரைவள்ளி கிழங்கு மூட்டைகளை துதிக்கையால் கிழித்து கிழங்குகளை தின்றன. சுமார் 10 நிமிடம் கிழங்குகளை தின்ற யானைகள், அதன்பின்னர் சுமார் 1 மணி நேரம் ரோட்டிலேயே நின்றுகொண்டு இருந்தன. இதனால் அந்த வழியாக எந்த வாகனமும் செல்ல முடியவில்லை.

1 மணி நேரம் கழித்து யானைகள் காட்டுக்குள் சென்றபின்னரே அச்சத்துடனே நொறுக்கப்பட்ட வேனை டிரைவர் ஓட்டிச்சென்றார். அதன்பிறகு மற்ற வாகனங்களும் அந்த இடத்தை கடந்து சென்றன. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, ரோட்டு ஓரம் யானைகள் வந்து நிற்கும்போது அதை கண்காணித்து வனத்துறையினர் விரட்டவேண்டும் என்றார்கள்.

யானைகள் வேனை அடித்து நொறுக்கிய சம்பவம் ஆசனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story