ஆசனூர் அருகே பரபரப்பு: பஸ்சை வழி மறித்த யானைகள்- 1 கி.மீ. தூரத்துக்கு விரட்டியதால் பயணிகள் அலறல்


ஆசனூர் அருகே பஸ்சை வழி மறித்த யானைகள், அதை 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு விரட்டி சென்றதால் பயணிகள் அச்சத்தால் அலறினர்.

ஈரோடு

தாளவாடி

ஆசனூர் அருகே பஸ்சை வழி மறித்த யானைகள், அதை 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு விரட்டி சென்றதால் பயணிகள் அச்சத்தால் அலறினர்.

தேசிய நெடுஞ்சாலை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, கேர்மாளம், ஆசனூர் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை, மான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

மேலும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அமைந்து உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையை குட்டிகளுடன் யானைகள் அவ்வப்போது கடந்து செல்வது வழக்கம்.

குட்டிகளுடன் வந்த யானைகள்

கடந்த சில நாட்களாக தமிழக- கர்நாடக எல்லையில் ஆசனூரை அடுத்த காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே கரும்புகளை தின்பதற்காக குட்டிகளுடன் யானைகள் உலா வருவதும், வாகனங்களை வழிமறித்து கரும்புகளை பிடுங்கி தின்பதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகருக்கு தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். ஆசனூர் அருகே சென்றபோது வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் வெளியேறிய காட்டு யானைகள் காரப்பள்ளம் சோதனை சாவடி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைக்கு வந்தன.

பஸ்சை துரத்தி சென்ற...

யானைகளை கண்டதும் அதிர்ச்சி அடைந்த டிரைவர் பஸ்சை சிறிது தூரத்திலேயே நிறுத்தினார். ஆனால் பஸ்சை நோக்கி யானைகள் வரத்தொடங்கின. இதனால் பயந்துபோன டிரைவர் பஸ்சை பின்னோக்கி நகர்த்தினார். ஒரு கட்டத்தில் ஆவேசம் அடைந்த யானைகள் பஸ்சை துரத்த தொடங்கின. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பஸ்சை யானைகள் துரத்த தொடங்கியதும், அதில் இருந்து பயணிகள் அச்சத்தால் அலறினார். அப்போது 'பண்ணாரி அம்மன் தாயே எங்களை காப்பாற்று. பண்ணாரி தாயே எங்களை காப்பாற்று' என் சத்தம் போட்டனர். 1 கிலோ மீட்டர் தூரம் வரை பஸ்சை துரத்திய யானைகள் பின்னர் அப்படியே நின்றது. இதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் அங்கிருந்து வனப்பகுதிக்குள் யானைகள் சென்றன. வனப்பகுதிக்குள் யானைகள் சென்றதை கண்டதும், பஸ்சில் இருந்த பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதற்கிடையே பஸ்சை யானைகள் துரத்தும் காட்சிகளை அதில் இருந்த பயணி ஒருவர் தன் ெசல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

காரை வழிமறித்தது

இதேபோல் நேற்று மாலை 4 மணி அளவில் சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி நோக்கி தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த ஒற்றை ஆண் யானை திடீரென அந்த பஸ்சை துரத்த தொடங்கியது. ஆனால் டிரைவர் பஸ்சை வேகமாக இயக்கி தப்பினார். ஆனால் அதே நேரத்தில் பஸ்சுக்கு பின்னால் வந்த காரை ஒற்றை யானை கண்டதும் ஆவேசம் அடைந்தது வழிமறித்ததுடன், அதை துரத்த தொடங்கியது. இதனால் அதன் டிரைவர் காரை பின்னோக்கி வேகமாக நகர்த்தி தப்பினார். பின்னர் சிறிது நேரத்தில் யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து வாகனங்களை துரத்தி வரும் யானைகளால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் பீதி அடைந்து உள்ளனர்.


Next Story