தாளவாடி அருகே விவசாயிகளை கொன்ற ஒற்றை யானையை அடர்ந்த காட்டுக்குள் விரட்டிய கும்கி யானைகள்


தாளவாடி அருகே விவசாயிகளை கொன்ற ஒற்றை யானையை அடர்ந்த காட்டுக்குள் விரட்டிய கும்கி யானைகள்
x

தாளவாடி அருகே விவசாயிகளை கொன்ற ஒற்றை யானையை கும்கி யானைகள் அடர்ந்த காட்டுக்குள் விரட்டின.

ஈரோடு

தாளவாடி

தாளவாடி அருகே விவசாயிகளை கொன்ற ஒற்றை யானையை கும்கி யானைகள் அடர்ந்த காட்டுக்குள் விரட்டின.

கருப்பன் யானை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் மான், சிறுத்தை, புலி, யானை போன்ற ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அருகே வனப்பகுதியையொட்டிய விவசாய நிலத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது.

தாளவாடி வனச்சரகத்தில் உள்ள இரிபுரம், திகனாரை, மல்குத்திப்புரம், தர்மாபுரம், பகுதியில் கடந்த சில வாரங்களாக கருப்பன் என்ற ஒற்றை யானை புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. அதை விரட்ட செல்லும் வன ஊழியர்களையும் யானை தாக்கி வருகிறது.

விவசாயிகளை கொன்றது

கடந்த 2 மாதங்களில் 2 விவசாயிகளை யானை மிதித்து கொன்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அட்டகாசம் செய்யும் ஒற்றை யானையை பிடிக்க வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் வனத்துறையினரிடம் கோரிக்கையும் வைத்தனர். இதைத்தொடர்ந்து யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சின்னதம்பி, ராஜவர்தன் என்ற 2 கும்கி யானைகள் தாளவாடிக்கு அழைத்து வரப்பட்டன.

இந்தநிலையில் நேற்று காலை முதல் வனத்துறை ஊழியர்கள் காட்டுக்குள் சென்று ஒற்றை யானை நடமாட்டத்தை காண்காணித்தனர். அப்போது சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் ஒற்றை யானை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கும்கி யானைகள் விரட்டின

இதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் புலிகள் காப்பக கால்நடை துறை டாக்டர் சதாசிவம், ஈரோடு வனப்பாதுகாப்பு அலுவலர் பழனிச்சாமி, தாளவாடி வனச்சரகர் சதீஷ் மற்றும் வனத்துறை ஊழியர்கள் 2 கும்கி யானைகளுடன் இரியபுரம் அருகே உள்ள வனப்பகுதிக்குள் சென்றனர்.

அங்கு ஒற்றை யானை நின்று கொண்டிருந்தது. இதையடுத்து அந்த யானையை கும்கி யானைகள் சுமார் 3 கி.மீ. தூரத்துக்கு அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டின. இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வனத்துறையினர் மீண்டும் ஒற்றை யானை நடமாட்டம் உள்ளதா? என்று வனப்பகுதிக்குள் சென்று கண்காணிக்க உள்ளனர். கும்கி யானைகளும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.


Next Story