சத்தியமங்கலம் அருகே வீட்டை சேதப்படுத்திய ஒற்றை யானை; வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டினர்
சத்தியமங்கலம் அருகே வீட்டை சேதப்படுத்திய ஒற்றை யானை; வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டினர்
பவானிசாகர்
சத்தியமங்கலம் அருகே வீட்டை சேதப்படுத்திய ஒற்றை யானையை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டிவிட்டனர்.
யானை அட்டகாசம்
சத்தியமங்கலம் அருகே உள்ள கெம்பநாயக்கன்பாளையம் பகுதியில் பெரும்பள்ளம் அணை அமைந்துள்ளது. இந்த அணையை ஒட்டிய பகுதியில் அய்யனார் (43) என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் உள்ளது. இங்குள்ள வீட்டில் அய்யனார் வசித்து வருகிறார். இது சத்தியமங்கலம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை யானை பெரும்பள்ளம் அணைப்பகுதியில் உள்ள விவசாய விளை நிலங்களில் புகுந்து பயிரை சேதப்படுத்தி வந்தது.
வீட்டை சேதப்படுத்தியது
இந்த நிலையில் ஒற்றை யானை அய்யனாரின் தோட்டத்தில் புகுந்தது. அவர் வசித்து வந்த வீட்டின் மேற்கூரையான சிமெண்ட் சீட்டை துதிக்கையால் பிடித்து இழுத்தது. இதில் சிமெண்ட் சீட் சேதமானது. இதனைப்பார்த்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுபற்றி சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் விரைந்து வந்து யானையை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். சிறிது நேர போராட்டத்துக்கு பிறகு யானை காட்டுக்குள் சென்றது.