திம்பம் மலைப்பாதையில் கரும்புக்காக காத்திருந்த ஒற்றை யானை-வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டிவிட்டனர்
திம்பம் மலைப்பாதையில் கரும்புக்காக காத்திருந்த ஒற்றை யானை-வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டிவிட்டனர்
சத்தியமங்கலம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரியில் இருந்து திம்பம் செல்ல 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது. தாளவாடி பகுதிகளில் இருந்து கரும்புகளை வெட்டி லாரிகளில் எடுத்து திம்பம் மலைப்பாதை வழியாக சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு எடுத்து செல்கிறார்கள். அப்போது டிரைவர்களும், கிளீனர்களும் லாரிகளில் இருந்து கரும்பு கட்டுகளை எடுத்து ரோட்டில் வீசிவிட்டு அங்கிருந்து செல்வார்கள்.
அதேபோல் நேற்று முன்தினம் காலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை ஒன்று திம்பம் மலைப்பாதை 2-வது சுற்றுக்கு வந்தது. பின்னர் கரும்பு ஏற்றி வரும் லாரிகளை எதிர்பார்த்து ஒரே இடத்தில் நின்று கொண்டு இருந்தது. அந்த இடத்தை விட்டு நகரவில்லை. இதனால் அந்த வழியாக பஸ், கார்களில் சென்றவர்கள் அச்சத்துடன் பயணித்தனர். ஆனால் யாரையும் யானை தொந்தரவு செய்யவில்லை. கரும்புக்காக வெகுநேரமாக அங்கேயே நின்று கொண்டிருந்தது.
இதுபற்றி பண்ணாரி வன சோதனைசாவடிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டார்கள். சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு யானை காட்டுக்குள் சென்றது. இதுபற்றி வனத்துறையினர் கூறும்போது, 'யானை நடமாட்டம் காணப்படுவதால் மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்த வேண்டாம். மேலும் கரும்புகளையும் எடுத்து ரோட்டில் வீசக்கூடாது' என்றனர்.