பண்ணாரி அம்மன் கோவில் அருகில் யானை மிதித்து லாரி டிரைவர் சாவு


பண்ணாரி அம்மன் கோவில் அருகில் யானை மிதித்து லாரி டிரைவர் சாவு
x

பண்ணாரி அம்மன் கோவில் அருகில் யானை மிதித்து லாரி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

ஈரோடு

சத்தியமங்கலம்

பண்ணாரி அம்மன் கோவில் அருகில் யானை மிதித்து லாரி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

யானை அட்டகாசம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இந்த யானைகள் இரவு நேரத்தில் பண்ணாரி அம்மன்கோவில் வளாகம் மற்றும் சோதனை சாவடிகள் அருகே நடமாடுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வந்த ஒற்றை யானை ரோட்டில் சுற்றித்திரிந்தது. பின்னர் அந்த யானை பண்ணாரி அம்மன் கோவில் ஊழியர்கள் குடியிருக்கும் பகுதிக்குள் நுழைய முயன்றது.

இதனை சோதனைச் சாவடியில் உள்ள வனத்துறையினர் மற்றும் அங்கிருந்த லாரி டிரைவர்கள் பார்த்தனர். உடனே யானையை அங்கிருந்து விரட்ட கூச்சல் போட்டார்கள். ஆனால் யானை அங்கிருந்து செல்லவில்லை. கோவில் வளாகத்திலேயே அங்குமிங்கும் சுற்றித்திரிந்தது. ்தொடர்ந்து யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் ஆவேசம் அடைந்த யானை திரும்பி அவர்களை துரத்த தொடங்கியது. இதனால் அனைவரும் தலைதெறிக்க அங்கிருந்து ஓடினார்கள்.

லாரி டிரைவர் சாவு

அப்போது ஒருவர் கல் தடுக்கியதில் கீழே விழுந்தார். இதனால் அவர் யானையிடம் சிக்கிக்கொண்டார். பின்னர் யானை துதிக்கையால் அவரை தூக்கி போட்டு காலால் மிதித்தது. இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் அவர் அலறி துடித்தார். சிறிது நேரத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அதன்பின்னர் வனத்துறையினர் நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு யானையை அங்கிருந்து காட்டுக்குள் விரட்டிவிட்டனர்.

பின்னர் இதுபற்றி சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் இறந்தவரின் பையில் இருந்த ஓட்டு்னர் உரிமத்தை போலீசார் எடுத்து பார்த்தனர். அவர் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் மலப்பள்ளி என்ற ஊரை சேர்ந்த சீனிவாஸ் (வயது 33) என்றும், லாரிடிரைவர் என்பதும் தெரிய வந்தது.

கோவில் அருகில்..

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், சீனிவாஸ் கோவை மாவட்டம் சூலூரில் இருந்து பண்ணாரி அம்மன் கோவில் வழியாக இரவு நேரத்தில் லாரியில் சென்றுள்ளார். ஆனால் லாரிகள் இரவு நேரங்களில் திம்பம் மலைப்பாதையில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் லாரியை கோவில் அருகே நிறுத்திவிட்டு காலையில் செல்லலாம் என இருந்துள்ளார். இந்த நிலையில் அங்கு வந்த யானையை விரட்ட முயன்றபோது யானையிடம் சிக்கி இறந்தது தெரிய வந்தது.

பிணத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பண்ணாரி அம்மன் கோவில் அருகே யானை மிதித்து லாரி டிரைவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.


Next Story