தாளவாடி அருகே பஸ்சை வழிமறித்த யானை
தாளவாடி அருகே பஸ்சை வழிமறித்த யானை
தாளவாடி
தாளவாடி அருகே உள்ள ஆசனூரில் வனப்பகுதி வழியாக மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. தண்ணீரையும், தீவனத்தையும் தேடி யானைகள் அடிக்கடி தேசிய நெடுஞ்சாலையை கடக்கின்றன. அதுபோன்ற நேரங்களில் அந்த வழியாக வரும் கரும்பு லாரிகளை மறித்து யானைகள் கரும்புகளை எடுத்து ருசித்து பழகிவிட்டன. இதனால் அடிக்கடி போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஆசனூர் காரப்பள்ளம் சோதனைச்சவாடி அருகே கரும்பு பாரம் ஏற்றிய லாரி வருகிறதா? என்று குட்டியுடன் ஒரு யானை உலா வந்தது. அப்போது தாளவாடியில் இருந்து சத்தி நோக்கி தனியார் பஸ் ஒன்று வந்துகொண்டு இருந்தது. அந்த பஸ்சை யானை மறித்தது. இதனால் டிரைவர் பஸ்சை நிறுத்தினார். உடனே யானை பஸ்சின் முன்பக்க கண்ணாடியை தடவி பார்த்தது. அப்போது உள்ளே இருந்த பயணிகள் பயத்தில் அலறினார்கள். சிலர் செல்போனில் படம் பிடித்தார்கள். சிறிது நேரம் கண்ணாடியை தடவிக்கொண்டே இருந்த யானை அதன்பின்னர் குட்டியுடன் காட்டுக்குள் சென்றுவிட்டது. அதன்பின்னரே பஸ்சும், அதன்பின்னால் நின்றிருந்த வாகனங்களும் புறப்பட்டு சென்றன.