சானமாவு வனப்பகுதியில் 3 யானைகள் நடமாட்டம்-பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை
ஓசூர்:
சானமாவு வனப்பகுதியில் 3 யானைகள் உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
3 யானைகள்
கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து தேன்கனிக்கோட்டை அருகே உள்ள வனப்பகுதிக்குள் 70-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் இடம் பெயர்ந்தன. அவை உணவு தேடி பல்வேறு குழுக்களாக பிரிந்து அவற்றின் குட்டிகளுடன் சுற்றி திரிகின்றன. இதில் 3 யானைகள் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு வெளியேறின.
பின்னர் அவை ஓசூர் அருகே உள்ள சானமாவு வனப்பகுதியில் புகுந்தன. அவை வனப்பகுதியில் நடமாடி வந்தன.
எச்சரிக்கை
இந்தநிலையில் நேற்று அந்த காட்டு யானைகள் பீர்ஜேப்பள்ளி அருகில் உள்ள பாலேகவுண்டன் ஏரி பகுதியில் நின்று கொண்டிருந்தன. இதனைப்பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் விரைந்து சென்று யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். மேலும் அவற்றின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
இதனிடையே யானைகள் சுற்றித்திரிவதால் சானமாவு, பீர்ஜேப்பள்ளி, நாயக்கனபள்ளி, ஆலியாளம், ராமாபுரம், பென்னிக்கல், டி.கொத்தப்பள்ளி மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், வனப்பகுதிக்குள் ஆடு, மாடுகளை மேய்க்க செல்ல வேண்டாம் என்றும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். மேலும் வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.