பாலக்கோடு அருகே பயிர்களை நாசம் செய்யும் காட்டு யானைகள்- அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட விவசாயிகள் கோரிக்கை
பாலக்கோடு:
பாலக்கோடு அருகே விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்யும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காட்டு யானைகள் அட்டகாசம்
பாலக்கோடு அருகே உள்ள ஈச்சம்பள்ளம், கரகூர், சீரியம்பட்டி, கோட்டூர், சொக்கன்கொட்டாய், நல்லூர், பாவளி, ஆத்துக்கொட்டாய், கண்சால்பெல், சீரண்டபுரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் நெல், வாழை, தக்காளி, கரும்பு உள்ளிட்ட பயிர்களை சாகுபடிசெய்து வருகிறார்கள்.இந்தநிலையில் மொரப்பூர் காப்புக்காடு பகுதியில் இருந்து வெளியேறும் 4 காட்டு யானைகள் கடந்த 2 மாதங்களாக விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. மேலும் அவை பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் நாசப்படுத்தி வருகின்றன. இதுதொடர்பாக வனத்துறையினரிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
கோரிக்கை
இதனிடையே யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுவதை தடுக்க விவசாயிகள் இரவில் தீப்பந்தங்களுடன் காவல் இருந்து வருகிறார்கள். மேலும் அவர்கள் பயிர்களை நாசம் செய்யும் யானைகளை அச்சத்துடன் விரட்டி வருகிறார்கள். இதனால் அவர்களின் உயிருக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே யானைகளால் நாசம் செய்யப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுவதை தடுக்க இரவில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். மேலும் குட்டியுடன் சுற்றித்திரியும் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.