ஆசனூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளை தூரத்திய ஒற்றை யானை
ஆசனூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளை ஒற்றை யானை துரத்தியது.
தாளவாடி
ஆசனூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளை ஒற்றை யானை துரத்தியது.
கரும்புகளை ருசிக்க...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் ஏராளமான யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக அந்த வழியாக வரும் கரும்பு லாரி டிரைவர்கள் யானைகளுக்காக கரும்பு கட்டுகளை சாலையோரம் போட்டு விட்டு சென்றுவிடுகிறார்கள். இதனால் கரும்புகளை தேடி யானைகள் சாலை ஓரத்திலேயே உலாவுகின்றன. இதேபோல் கரும்பு லோடு ஏற்றிச்செல்லும் லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்களில் இருந்து கரும்பு துண்டுகள் ரோடுகளில் சிதறி கிடக்கும். இதை எடுத்து ருசிப்பதற்காகவும் அடிக்கடி யானைகள் ரோட்டிலேயே சுற்றுகின்றன.
துரத்தியது
இந்தநிலையில் நேற்று மதியம் ஆசனூரில் இருந்து தாளவாடி செல்லும் நெடுஞ்சாலையில் சிதறிக்கிடந்த கரும்பு துண்டுகளை ஒரு யானை எடுத்து தின்று கொண்டு இருந்தது. அப்போது ஆவேசம் அடைந்து திடீரென இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை யானை துரத்த ஆரம்பித்ததது.
இதனால் வாகன ஓட்டிகள் அலறி அடித்து வேகமாக சென்று யானையிடம் இருந்து தப்பினார்கள். சிலர் யானை நிற்பதை பார்த்து தூரத்திலேயே வாகனங்களை நிறுத்திக்கொண்டார்கள்.
சுமார் 15 நிமிடம் யானை ரோட்டிலேயே அங்குமிங்கும் சுற்றியது. பின்னர் காட்டுக்குள் சென்றுவிட்டது. அதன்பி்ன்னரே வாகனங்கள் செல்ல தொடங்கின.