மாமரத்துபள்ளம் கிராமத்தில் விளை நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்யும் யானைகள்-அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட விவசாயிகள் வலியுறுத்தல்


மாமரத்துபள்ளம் கிராமத்தில் விளை நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்யும் யானைகள்-அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 13 Dec 2022 12:15 AM IST (Updated: 13 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

மாமரத்துபள்ளம் கிராமத்தில் இரவு நேரங்களில் விவசாய விளை நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்யும் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.

யானைகள் நடமாட்டம்

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே மாமரத்துபள்ளம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு சுமார் 400 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் நெல், தக்காளி, கேழ்வரகு, சோளம், கம்பு உள்ளிட்ட பல்வேறு விளை பொருட்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

இந்த பகுதியில் அரசு கலைக் கல்லூரியும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த கிராமம் அருகே உள்ள வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக யானைகள் நடமாட்டம் இருக்கிறது.

பயிர் சேதம்

குறிப்பாக இரவு நேரங்களில் 3 யானைகள் இந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து அங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல், தக்காளி உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்கின்றன. இதனால் ஏற்படும் பயிர் சேதத்தால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த பாலக்கோடு வனத்துறையினர் மாமரத்துபள்ளம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் விவசாய நிலங்களில் புகுந்து பயிர் சேதத்தை ஏற்படுத்தும் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.


Next Story