தாளவாடி அருகே அட்டகாசம்: 2 மயக்க ஊசிகள் செலுத்தியும் மயங்காத கருப்பன் யானை- அடர்ந்த காட்டுக்குள் ஓடியது


தாளவாடி அருகே அட்டகாசம் செய்து வரும் கருப்பன் யானைக்கு 2 மயக்க ஊசிகள் செலுத்தியும் மயக்கம் அடையவில்லை. வனத்துறையினருக்கு போக்குகாட்டி அடர்ந்த காட்டுக்குள் ஓடியது.

ஈரோடு

தாளவாடி

தாளவாடி அருகே அட்டகாசம் செய்து வரும் கருப்பன் யானைக்கு 2 மயக்க ஊசிகள் செலுத்தியும் மயக்கம் அடையவில்லை. வனத்துறையினருக்கு போக்குகாட்டி அடர்ந்த காட்டுக்குள் ஓடியது.

கருப்பன் யானை

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி மற்றும் ஜீர்கள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கருப்பன் என்ற ஒற்றை யானை, கடந்த பல மாதங்களாக அருகே உள்ள கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. இதேபோல் தோட்டத்து காவலுக்கு இருந்த தர்மாபுரம் பகுதியை சேர்ந்த மல்லப்பா, திகினாரை ஜோரகாடு பகுதியை சேர்ந்த மாதேவா என்ற 2 விவசாயிகளை மிதித்து கொன்றது.

மேலும் ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்ட திகினாரை, ஜோரகாடு, கரளவாடி, மரியபுரம், பகுதியில் கரும்பு, வாழை, மக்காச்சோளம், முட்டைக்கோஸ் உள்ளிட்ட பயிர்களை தொடர்ந்து நாசம் செய்து வருகிறது.

சிறைபிடிப்பு

இந்தநிலையில் அட்டகாசம் செய்து வரும் கருப்பன் யானையை கும்கி யானைகளை கொண்டு வந்து பிடிக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் வனத்துறை அதிகாரிகளின் வாகனங்களை சிறை பிடித்தனர்.

இதையடுத்து பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் இருந்து கபில்தேவ், அரிசி ராஜா, கலீம் என 3 கும்கி யானைகள் ஜோரகாடு பகுதிக்கு வரவழைக்கப்பட்டன. அதன்பின்னர் வனத்துறை அதிகாரிகள் கருப்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கலாம் என்று முடிவு செய்தார்கள்.

இதைத்தொடர்ந்து கடந்த 11-ந் தேதி மாவட்ட வனப்பாதுகாவலர் ராஜ்குமார், ஆசனூர் வனக்கோட்ட உதவி இயக்குனர் தேவேந்திரகுமார் மீனா, வனச்சரகர்கள் ராமலிங்கம் (ஜீர்கள்ளி), சதீஸ் (தாளவாடி), தினேஷ் (கேர்மாளம்), கால்நடைதுறை மருத்துவர்கள் சதாசிவம் (சத்தியமங்கலம்), விஜயராகவன் (ஆனைமலை), ராஜேஷ்குமார் (முதுமலை), பிரகாஷ் (ஓசூர்) தலைமையில் 150 வன ஊழியர்களுடன் கருப்பன் யானையை பிடிக்கும் பணி தொடங்கியது.

சுற்றி வளைப்பு

கடந்த புதன்கிழமை இரவு விடிய விடிய காத்திருந்தும் கருப்பன் யானை கண்ணுக்கு சிக்கவில்ைல.

தான் வழக்கமாக சுற்றும் பாதையை மாற்றி மறுநாள் வியாழக்கிழமை இரியபுரம், மல்குத்திபுரம் கிராமங்களுக்குள் நுழைந்தது. உடனே வனத்துறையினரும், மருத்துவ குழுவினரும் கருப்பன் யானையை சுற்றி வளைத்தார்கள். அப்போது ஆவேசம் அடைந்த யானை அனைவரையும் துரத்தியது. இதனால் உயிர்தப்பிக்க வனத்துறையின் ஓடினார்கள். அதன்பின்னர் அங்கிருந்து செல்லும்போது பசுமாட்டின் வயிற்றில் தந்தத்தால் குத்திவிட்டு சென்றது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் கருப்பன் யானை வனப்பகுதியை விட்டு வெளியே தோட்டத்துக்குள் நுழைந்தால் மயக்க ஊசி செலுத்தலாம் என்று மருத்துவ துறையினர் வன ஊழியர்களுடன் தயார் நிலையில் இருந்தனர். அப்போது மல்குத்திபுரத்தில் தேவராஜ் என்பவருடைய தோட்டத்தில் கருப்பன் யானை புகுந்தது.

2 மயக்க ஊசி...

உடனே வனத்துறையினர் பொக்லைன் எந்திரங்களின் உதவியுடன் கருப்பன் யானையை சுற்றிவளைத்தனர். பின்னர் அதிகாலை 3.15 மணியளவில் மருத்துவ குழுவினர் கருப்பன் யானைக்கு துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தினார்கள். பாதி மயக்கத்தில் இருந்த கருப்பன் யானையை கும்கி யானைகள் மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம் என்றபோது, யானைக்கு மயக்கம் தெளிந்துவிட்டது. உடனே அங்கிருந்து வனப்பகுதியை நோக்கி ஓடியது. மருத்துவ குழுவினரும் தொடர்ந்து சென்று மீண்டும் ஒரு மயக்க ஊசியை செலுத்தினார்கள். ஆனால் 2-வது ஊசி செலுத்திய பின்னரும் கருப்பன் யானை மயக்க நிலைக்கு செல்லவில்லை. அடர்ந்த வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது. தொடர்ந்து வனத்துறையினர் தேடி வருகிறார்கள். 2 மயக்க ஊசிகள் போட்டும் மயக்க நிலைக்கு செல்லாத கருப்பன் யானையை எப்படி கட்டுக்குள் கொண்டு வருவது என்று மருத்துவ குழுவினர் திணறி வருகிறார்கள். எனினும் கருப்பன் காட்டுக்குள் இருந்து வெளியேறாமல் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று வனத்துறையினர் கூறினார்கள்.


Next Story