ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல்: வனத்துறையினரை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்-பாப்பாரப்பட்டி அருகே பரபரப்பு
பாப்பாரப்பட்டி:
பாப்பாரப்பட்டி அருகே காட்டு யானைகளை விரட்டும் பணியின் போது ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய வனத்துறையினரை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காட்டு யானைகள்
பாப்பாரப்பட்டி வனப்பகுதியில் 2 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. அவை அவ்வப்போது வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. எனவே அந்த காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் வனத்துறையினர் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் பாப்பாரப்பட்டி அருகே உள்ள சஜ்ஜலஅள்ளியில், வேப்பிலைஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி (வயது 35) வீட்டின் அருகே உள்ள நெல் வயலில் 2 காட்டு யானைகள் நேற்று முன்தினம் இரவு புகுந்தன. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தாக்குதல்
அதன்பேரில் இரவு 8 மணிக்கு வனக்காவலர்கள் சண்முகம், சுந்தரமூர்த்தி ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். அவர்களிடம், பொதுமக்கள் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். அப்போது திடீரென வனத்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்தநிலையில் ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமியை, வனக்காவலர் சுந்தரமூர்த்தி தாக்கி, கீழே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதில் அவர் காயம் அடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வனக்காவலர்கள் சுந்தரமூர்த்தி, சண்முகம் ஆகியோரை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்து சண்முகம் தப்பி சென்றார். சுந்தரமூர்த்தியை பொதுமக்கள் சிறைபிடித்து வைத்திருந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் பேச்சுவார்த்தை
இதுகுறித்து அறிந்த வனவர் கனகராஜ் மற்றும் வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஏற்பட்ட தகராறில் கனகராஜ் தாக்கப்பட்டார். இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி, வனவர் கனகராஜ் ஆகியோர் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்தநிலையில் பென்னாகரம் துணை போலீஸ் சூப்பிரண்டு இமயவரம்பன் மற்றும் பாப்பாரப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து வனக்காவலர் சுந்தரமூர்த்தி விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முகாம்
இதனிடையே நெல் வயலில் புகுந்த யானைகள் அங்கிருந்து அருகில் உள்ள பனைக்குளம் ஏரி பகுதிக்கு சென்றன. அவை நேற்று மாலை வரை அங்கேயே முகாமிட்டு இருந்தன. பின்னர் அவை வனப்பகுதிக்குள் சென்றன.