தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து கருப்பன் யானை அட்டகாசம்- கரும்பு பயிர் சேதம்


தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து கருப்பன் யானை அட்டகாசம்- கரும்பு பயிர் சேதம்
x

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து கருப்பன் யானை அட்டகாசம் செய்தது. இதில் கரும்பு பயிர் சேதமடைந்தது.

ஈரோடு

தாளவாடி

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து கருப்பன் யானை அட்டகாசம் செய்தது. இதில் கரும்பு பயிர் சேதமடைந்தது.

கருப்பன் யானை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் வனத்தை ஒட்டியுள்ள விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகிவிட்டது. கடந்த ஆண்டு தாளவாடி மற்றும் ஜீர்கள்ளி வனப்பகுதியில் முகாமிட்ட கருப்பன் என்ற ஒற்றை யானை காட்டை விட்டு வெளியேறி விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து நாள்தோறும் பயிர்களை நாசம் செய்தது.

விவசாயிகளுடன் சேர்ந்து வனத்துறையினர் யானையை காட்டுக்குள் விரட்ட முயன்றார்கள். ஆனால் கருப்பன் யானை விரட்ட வருபவர்களை துரத்தியது. மேலும் தோட்டத்தில் காவலுக்கு இருந்த 2 விவசாயிகளை மிதித்து கொன்றது. இதையடுத்து கருப்பன் யானையை மயக்க ஊசிபோட்டு பிடிக்க வேண்டும் என்று வனத்துறையினரின் வாகனங்களை விவசாயிகள் சிறைபிடித்து போராட்டமும் நடத்தினார்கள்.

மீண்டும் வந்தது

இதையடுத்து பொள்ளாச்சி டாப் சிலிப் பகுதியில் இருந்து 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு அதன் மூலம் மருத்துவ குழுவினர் 2 முறை துப்பாக்கி மூலம் கருப்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தினார்கள். ஆனால் கருப்பன் மயக்கம் அடையாமல் காட்டுக்குள் ஓடிவிட்டது. கருப்பன் யானை திரும்ப வராது என்று நினைத்து கும்கி யானைகள் திருப்பி அனுப்பப்பட்டன.

இந்த நிலையில் பல நாட்களுக்கு பிறகு கருப்பன் யானை மீண்டும் தோட்டங்களுக்குள் புகுந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜோரைக்காடு பகுதியை சேர்ந்த தாமோதரனின் கரும்பு தோட்டத்துக்குள் புகுந்து சேதப்படுத்தியது. அதன்பின்னர் அருகே உள்ள தோட்டத்துக்குள் புகுந்து முட்டைக்கோஸ், பீட்ரூட்டை நாசப்படுத்தியது. இதுபற்றி அறிந்ததும் வனத்துறையினரும், விவசாயிகளும் அங்கு சென்று யானையை காட்டுக்குள் விரட்டிவிட்டனர்.

கரும்பு பயிர் நாசம்

இந்த நிலையில் நேற்று அதிகாலை மீண்டும் ஜோரைகாடு பகுதியை சேர்ந்த வீராசாமி (வயது 51) என்பவரின் தோட்டத்தில் கருப்பன் யானை மீண்டும் புகுந்தது. இதை பார்த்த தோட்டத்து விவசாயி அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுபற்றி அக்கம்பக்கத்து விவசாயிகளிடம் கூறினார்.

அதைத்தொடர்ந்து விவசாயிகள் அனைவரும் அங்கு ஒன்று திரண்டனர். பின்னர் யானையை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். சிறிது நேர போராட்டத்துக்கு பிறகு யானை காட்டு்க்குள் சென்றது. யானையால் ½ ஏக்கர் பரப்பளவிலான கரும்பு பயிர் சேதமடைந்தது. விரைவில் கருப்பன் யானையை வனத்துறையினர் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story