ஊருக்குள் புகுந்த காட்டு யானை
கெலமங்கலம் அருகே ஊருக்குள் காட்டு யானை புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராயக்கோட்டை
கெலமங்கலம் அருகே ஊருக்குள் காட்டு யானை புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காட்டு யானை
கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. இதனிடையே உத்தனப்பள்ளி அருகே சானமாவு காட்டில் 58 யானைகள் முகாமிட்டுள்ளன. டி.கொத்தப்பள்ளி, சினிகிரிப்பள்ளி, சானமாவு, போடூர்பள்ளம், பேரண்டப்பள்ளி, பென்னிக்கல் ஆகிய பகுதிகளில் 6 குழுக்களாக இந்த யானைகள் பிரிந்து சுற்றித்திரிகின்றன.
இந்த நிலையில் சானமாவு காட்டில் இருந்து ஒரு காட்டு யானை நேற்று காலை கெலமங்கலம் அருகே உள்ள போடிச்சிப்பள்ளி கிராமத்திற்குள் புகுந்தது. இதைபார்த்து கிராமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
வனப்பகுதிக்குள் விரட்டினர்
அதன்பேரில் வனத்துறையினர் அங்கு வந்தனர். அவர்கள் பட்டாசுகளை வெடித்து காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர். பின்னர் அந்த யானை சானமாவு காட்டிற்குள் சென்றது. கெலமங்கலம் அருகே ஊருக்குள் காட்டு யானை சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த யானை மீண்டும் ஊருக்குள் வராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.