தர்மபுரி அருகே கரும்பு தோட்டத்திற்குள் புகுந்த யானை-வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு


தர்மபுரி அருகே கரும்பு தோட்டத்திற்குள் புகுந்த யானை-வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 9 Feb 2023 12:15 AM IST (Updated: 9 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி அருகே கரும்பு தோட்டத்தில் புகுந்த ஆண் யானையால் பரபரப்பு ஏற்பட்டது. வனத்துறையினர் அந்த பகுதியில் முகாமிட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறார்கள்.

கிராமத்தில் புகுந்த யானை

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக 2 காட்டு யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தன. வனத்துறையினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கும்கி யானை உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி மக்னா யானையை பிடித்து லாரியில் ஏற்றி டாப்சிலிப் பகுதியில் விடப்பட்டது.

இந்நிலையில் வனப்பகுதிக்கு சென்ற மற்றொரு ஆண் யானை கடந்த 2 தினங்களாக பாலக்கோடு, சோமனஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்து வந்தது. இந்த யானை நேற்று தர்மபுரியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள முத்துகவுண்டன்கொட்டாய் கிராமத்துக்குள் புகுந்தது. குடியிருப்பு பகுதி அருகே நடமாடிய அந்த யானையை பார்த்த பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர்.

வனத்துறையினர் கண்காணிப்பு

இந்தநிலையில் அந்த யானை அருகே உள்ள தனியார் பள்ளியின் பின்பகுதியில் கரும்பு தோட்டத்தில் புகுந்து, கரும்புகளை தின்று சேதப்படுத்தியது. தகவல் அறிந்த வனச்சரகர் அருண் பிரசாத் மற்றும் குழுவினர் அந்த பகுதியில் முகாமிட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணித்தனர்.

நேற்று இரவு வரை யானை அதே பகுதியில் இருந்தது. இரவு நேரத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் யானையை காட்டுப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். யானை முகாமிட்டுள்ள பகுதியில் வனத்துறையை சேர்ந்த 40 பேர் மற்றும் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை

இதுகுறித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர் கூறுகையில், தர்மபுரி நகரின் அருகே வந்துள்ள காட்டு யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த யானை சாலை மற்றும் குடியிருப்பு பகுதிக்கு செல்லாத வகையில் கண்காணிப்பு பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

யானை நடமாட்டம் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் இரவு நேரத்தில் வீட்டின் வெளியே நடமாட வேண்டாம். விவசாய நிலங்களுக்கு செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2 மாதங்களாக பாலக்கோடு, பாப்பாரப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றித்திரிந்த காட்டு யானை தர்மபுரி நகரின் அருகே வந்ததால் ரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story