அருள்வாடி அருகே தமிழக- கர்நாடக எல்லையில் கூட்டம் கூட்டமாக உலா வரும் யானைகள்
அருள்வாடி அருகே தமிழக- கர்நாடக எல்லையில் யானைகள் கூட்டம் கூட்டமாக உலா வருகின்றன.
தாளவாடி
அருள்வாடி அருகே தமிழக- கர்நாடக எல்லையில் யானைகள் கூட்டம் கூட்டமாக உலா வருகின்றன.
10 வனச்சரகங்கள்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, கேர்மாளம், ஜீர்கள்ளி உள்பட மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
கூட்டம் கூட்டமாக...
ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்ட அருள்வாடி கிராமம் தமிழக கர்நாடக எல்லையில் அமைந்துள்ளது. நேற்று மாலை கர்நாடக வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 4 யானைகள் தமிழக வனப்பகுதியை ஒட்டி உள்ள அருள்வாடி கிராமம் அருகே உள்ள மானாவாரி நிலத்தில் சுற்றி திரிந்து உள்ளது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளும் பொதுமக்களும் அச்சமடைந்தனர். இது பற்றி அறிந்ததும் ஜீர்கள்ளி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து யானைகள் விவசாய தோட்டத்துக்குள் புகுந்து விடாதவாறு ரோந்து பணியில் ஈடுபட்டனர். தற்போது கடந்த சில நாட்களாக யானைகள் கூட்டம் கூட்டமாக அருள்வாடி கிராமம் பகுதியில் உலா வருகின்றன. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், 'யானைகள் கூட்டம் விவசாய தோட்டத்துக்குள் புகுந்துவிடாதவாறு அவைகளை விரட்டியடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் யானைகள் வருவதை தடுக்க அகழியும் அமைக்க வேண்டும்,' என்றனர்.