தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்து கருப்பன் யானை விடிய, விடிய அட்டகாசம்; 2 ஏக்கர் கரும்பு பயிர் சேதம்


தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்த கருப்பன் யானை விடிய, விடிய அட்டகாசம் செய்தது. இதில் 2 ஏக்கர் பரப்பளவிலான கரும்பு பயிர் சேதமடைந்தது.

ஈரோடு

தாளவாடி

தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்த கருப்பன் யானை விடிய, விடிய அட்டகாசம் செய்தது. இதில் 2 ஏக்கர் பரப்பளவிலான கரும்பு பயிர் சேதமடைந்தது.

கருப்பன் யானை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட மொத்தம் 10 வனச்சரகங்களில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இங்கு வனவிலங்குகள் குறிப்பாக யானைகள் அவ்வப்போது உணவு, தண்ணீர் தேடி அருகே உள்ள விவசாயத் தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வதும், கால்நடைகளை வேட்டையாடுவதும் தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தாளவாடி மற்றும் ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கருப்பன் யானை அருகே உள்ள விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தது. அதேபோல விவசாய தோட்டத்தில் காவலுக்கு இருந்த 2 விவசாயிகளை கொன்றது.

இதைத்தொடர்ந்து பொள்ளாச்சி டாப்சிலிப்பில் இருந்து 3 கும்கி யானைகளை வரவழைத்து, மருத்துவ குழுவினர் கருப்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தினார்கள். ஆனால் மயக்க ஊசிக்கு மயங்காத கருப்பன் யானை வனப்பகுதிக்குள் ஓடி சென்றது. இதனால் கருப்பன் யானையை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வந்தனர். தொடர்ந்து கருப்பன் யானை தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்தது.

மயக்க ஊசிக்கு சிக்கவில்லை

இதைத்தொடர்ந்து விவசாயிகள் கருப்பன் யானையை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் இருந்து பொம்மன், சுஜய் என 2 கும்கி யானைகள் கடந்த 20-ந் தேதி காலை தாளவாடி வனச்சரகத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் கருப்பன் யானையை வனத்துறையினர் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது யானை கும்டாபுரம் கிராமத்தில் உள்ள சின்ராசு என்பவரது கரும்பு தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. இதைத்தொடர்ந்து வனத்துறையினர் கும்கி யானைகள் மற்றும் மருத்துவ குழுவினருடன் அங்கு சென்று கருப்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தினார்கள். ஆனால் யானை மயக்க ஊசிக்கு மயங்காமல் அங்கிருந்து சென்றுவிட்டது.

விடிய, விடிய அட்டகாசம்

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து கருப்பன் யானை வெளியேறியது. பின்னர் அருகே உள்ள திகனாரை கிராமத்தை சேர்ந்த ரங்கசாமி என்பவரது கரும்பு தோட்டத்துக்குள் புகுந்தது. அதன்பின்னர் கரும்புகளை தின்றும் மிதித்தும் நாசம் செய்தது.

சத்தம் கேட்டு தோட்டத்து விவசாயி ரங்கசாமி அங்கு சென்று பார்த்தார். அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி உடனே ஜீர்கள்ளி வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து வன ஊழியர்கள் அங்கு சென்று யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் யானை அங்கிருந்து செல்லவில்லை. கரும்பு தோட்டத்தையே சுற்றி சுற்றி வந்து பயிரை சேதப்படுத்தியது. நேற்று அதிகாலை 4 மணி அளவிலேயே யானை வனப்பகுதிக்குள் சென்றது. கருப்பன் யானையால் 2 ஏக்கர் பரப்பளவிலான கரும்பு பயிர் சேதமடைந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் மீண்டும் கருப்பன் யானை நேற்று இரவு 8 மணி அளவில் திகனாரை அருகே ஜோரைக்காடு பகுதியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்டதுக்குள் புகுந்து கரும்பு மற்றும் வாழைகளை சேதம் செய்ய தொடங்கியது. இதுகுறித்து வனத்துறையினருக்கு அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் தகவல் தெரிவித்தனர்.


Next Story