6 முறை மயக்க ஊசி செலுத்தியும் அடங்காத கருப்பன் யானை: பிடிக்க வந்த கும்கி யானைகள் திரும்பி சென்றன


6 முறை மயக்க ஊசி செலுத்தியும் அடங்காத கருப்பன் யானை: பிடிக்க வந்த கும்கி யானைகள் திரும்பி சென்றன
x

6 முறை மயக்க ஊசி செலுத்தியும் அடங்காத கருப்பன் யானையை பிடிக்க முடியாமல் கும்கி யானைகள் திரும்பி சென்றன.

ஈரோடு

தாளவாடி

6 முறை மயக்க ஊசி செலுத்தியும் அடங்காத கருப்பன் யானையை பிடிக்க முடியாமல் கும்கி யானைகள் திரும்பி சென்றன.

கருப்பன் யானை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள வனப்பகுதிகளில் ஏராளமான யானைகள் வசிக்கின்றன. தண்ணீர் மற்றும் தீவனம் தேடி அடிக்கடி யானைகள் காட்டை விட்டு வெளியேறி அருகே உள்ள கிராமங்களுக்கு படையெடுத்து விடுகின்றன. விவசாய நிலங்களில் இறங்கி பயிர்களை நாசம் செய்கின்றன.

இதில் குறிப்பாக கருப்பன் என்று கிராம மக்களால் பெயரிடப்பட்ட காட்டு யானை கடந்த ஒரு வருடமாக அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது.

2 விவசாயிகளை கொன்றது

இரவு நேரங்களில் தாளவாடி மற்றும் ஜீர்கள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறும் கருப்பன் யானை விடிய விடிய விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை தின்றும், மிதித்தும் நாசம் செய்கிறது.

மேலும் தோட்ட காவலுக்கு படுத்திருந்த 2 விவசாயிகளை கருப்பன் யானை மிதித்து கொன்றுவிட்டது. அதனால் யானையை பிடிக்க வேண்டும் என்று விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள்.

இதனால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ந் தேதி பொள்ளாச்சி டாப்சிலிப் வளர்ப்பு யானைகள் முகாமில் இருந்து 2 கும்கி யானைகள் இரியபுரம் கிராமத்துக்கு வாகனங்களில் கொண்டுவரப்பட்டன.

மயங்கவில்லை

கும்கி யானைகள் இணைந்து கருப்பன் யானையை அடர்ந்த காட்டுக்குள் விரட்டிவிட்டன. அதன்பின்னர் கும்கி யானைகள் சென்றதும் மீண்டும் கருப்பன் யானை தோட்டங்களை நோக்கி வரத்தொடங்கியது.

இதனால் மீண்டும் டாப்சிலிப்பில் இருந்து அரிசி ராஜா, கலீம், கபில்தேவ் என்ற 3 கும்கி யானைகள் ஜோராக்காடு வனப்பகுதிக்கு அழைத்து வரப்பட்டன. கும்கி யானைகள் தோட்டத்தை நோக்கி வந்த கருப்பன் யானையை சுற்றி வளைத்தன. அப்போது அங்கு தயாராக இருந்த மருத்துவ குழுவினர் வனத்துறையினருடன் சேர்ந்து மயக்க ஊசியை துப்பாக்கி மூலம் செலுத்தினார்கள். ஆனால் கருப்பன் யானை மயங்கவில்லை. காட்டுக்குள் ஓடிவிட்டது.

அட்டகாசம் ஓயவில்லை

இதுபோல் தொடர்ந்து 4 முறை மருத்துவ குழுவினர் கருப்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தினார்கள். ஆனால் யானை மயங்காமல் தப்பி சென்றுவிட்டது. இதனால் கருப்பனை பிடிக்கும் பணியை வனத்துறையினர் தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். கும்கி யானைகள் டாப்சிலிப் பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டன.

ஆனால் கருப்பனின் அட்டகாசம் ஓயவில்லை. நாள்தோறும் பயிர்களை நாசம் செய்தது. இதனால் கருப்பனை எப்படியாவது பிடிக்கவேண்டும் என்று விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் இறங்கினார்கள்.

வனத்துறை தினறல்

இதைத்தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் இருந்து பொம்மன், சுஜய் என்ற 2 கும்கி யானைகள் கடந்த மாதம் 20-ந் தேதி தாளவாடிக்கு அழைத்து வரப்பட்டன.

இந்தநிலையில் கடந்த மாதம் 25-ந் தேதி தாளவாடி அருகே உள்ள கும்டாபுரத்தில் உள்ள தோட்டத்துக்கு கருப்பன் யானை வந்தது. உடனே தயாராக இருந்த கால்நடை மருத்துவ குழுவினர் 2 முறை மயக்க ஊசி செலுத்தினார்கள். ஆனால் அதுவும் தோல்வியில் முடிந்தது. கருப்பன் யானை வழக்கம்போல் மயங்காமல் காட்டுக்குள் ஓடிவிட்டது. இதனால் கருப்பன் யானையை பிடிக்க வழியின்றி வனத்துறையினர் தினறி வருகிறார்கள்.

திருப்பி அனுப்பி வைப்பு

இதற்கிடையே கருப்பனை பிடிக்க அழைத்து வரப்பட்ட 2 கும்கி யானைகளும் நேற்று மீண்டும் லாரிகளில் ஏற்றி முதுமலை தெப்பக்காட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன.

6 முறை மயக்க ஊசி செலுத்தியும் அடங்காத கருப்பன் யானையை நினைத்து விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.


Next Story