கிருஷ்ணகிரி அருகே அட்டகாசம் செய்த காட்டு யானைகள் ஆந்திர வனப்பகுதிக்கு விரட்டியடிப்பு-பொதுமக்கள் நிம்மதி


கிருஷ்ணகிரி அருகே அட்டகாசம் செய்த காட்டு யானைகள் ஆந்திர வனப்பகுதிக்கு விரட்டியடிப்பு-பொதுமக்கள் நிம்மதி
x
தினத்தந்தி 10 May 2023 12:15 AM IST (Updated: 10 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அருகே அட்டகாசம் செய்து வந்த காட்டு யானைகள் ஆந்திர வனப்பகுதிக்கு விரட்டப்பட்டதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

காட்டு யானைகள்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு ஆண் யானைகள் கடந்த 6-ந் தேதி கிருஷ்ணகிரி நகரம் அருகில் உள்ள தேவ சமுத்திரம் ஏரியில் முகாமிட்டது. ஏரி தண்ணீரில் உற்சாகமாக குளித்து விளையாடிய யானைகளை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்துடன் கண்டு ரசித்தனர்.

தொடர்ந்து 7-ந் தேதி அதிகாலை கிருஷ்ணகிரி நகருக்குள் வந்த யானைகள் சாமந்தமலைக்கு சென்றன. அங்கு விவசாய நிலத்தில் காவலுக்கு இருந்த விவசாயி பெருமாள் என்பவரை காட்டு யானைகள் தாக்கியதில் அவர் உயிர் இழந்தார்.

வனப்பகுதிக்கு சென்றன

அந்த பகுதியில் மாந்தோப்பில் முகாமிட்டு இருந்த யானைகளை வனத்துறையினர் விரட்டினார்கள். ஆனாலும் கிருஷ்ணகிரி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்த கன மழையால் யானைகளை விரட்டுவதில் சிரமம் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று யானைகளை விரட்டும் பணிகள் நடந்தன.

தொடர்ந்து கீழ்பூங்குருத்தி அருகே மூலக்காடு பகுதியில் முகாமிட்டிருந்த யானைகளை வனத்துறையினர் விரட்டினார்கள். அப்போது யானைகள் மகராஜகடை சுற்று வட்டார பகுதிகளில் விவசாய பயிர்களை நாசம் செய்தன.. தொடர்ந்து நாரலப்பள்ளி காடு வழியாக யானைகள் ஆந்திர வனப்பகுதியையொட்டி சென்றன.

பொதுமக்கள் நிம்மதி

யானைகள் அட்டகாசம் காரணமாக மகராஜகடை சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் யாரும் வெளியே வர வேண்டாம். காவலுக்கு இருக்க வேண்டாம் என்று வனத்துறையினர் கேட்டுக் கொண்டனர். இதனால் வயல்வெளிகளின் அருகில் சமையல் செய்து சாப்பிட்டு வந்த விவசாயிகள் பலரும் வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே 2 நாட்களாக இருந்தன.

கிருஷ்ணகிரி பகுதியில் அட்டகாசம் செய்து வந்த யானைகள் ஆந்திர வனப்பகுதிக்கு விரட்டப்பட்டதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.


Next Story