கேர்மாளம் அருகே தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானை விடிய விடிய அட்டகாசம்; ஒரு ஏக்கர் முட்டைக்கோஸ் பயிர் நாசம்
கேர்மாளம் அருகே தோட்டத்துக்குள் புகுந்து விடிய விடிய அட்டகாசம் செய்த காட்டு யானை ஒரு ஏக்கர் பரப்பளவிலான முட்டைக்கோஸ் பயிரை நாசப்படுத்தியது.
தாளவாடி
கேர்மாளம் அருகே தோட்டத்துக்குள் புகுந்து விடிய விடிய அட்டகாசம் செய்த காட்டு யானை ஒரு ஏக்கர் பரப்பளவிலான முட்டைக்கோஸ் பயிரை நாசப்படுத்தியது.
முட்டைக்கோஸ் பயிர்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட மொத்தம் 10 வனச்சரகங்களில் யானை உள்பட ஏராளமான வனவிலங்குகள் காணப்படுகின்றன. இவை உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி அருகே உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருவது தொடர் கதையாகி வருகிறது
தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள கேர்மாளத்தை சேர்ந்தவர் சித்தப்பா (வயது45). விவசாயி. இவருக்கு வீட்டையொட்டி தோட்டம் உள்ளது. இங்கு அவர் 2 ஏக்கர் பரப்பளவில் முட்டைகோஸ் பயிரிட்டிருந்தார். இவை நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது.
யானை அட்டகாசம்
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் கேர்மாளம் வனப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று வெளியேறியது. பின்னர் யானை கேர்மாளம் கிராமத்தில் உள்ள சித்தப்பாவின் முட்டைக்கோஸ் தோட்டத்துக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது. பின்னர் அங்கு சாகுபடி செய்யப்பட்டிருந்த முட்டைக்கோஸ் பயிரை தின்றது.
சத்தம் கேட்டு வீட்டில் இருந்த சித்தப்பா தோட்டத்துக்கு சென்று டார்ச் லைட் அடித்து பார்த்தார். அப்போது தோட்டத்தில் காட்டு யானை நின்று பயிரை சேதப்படுத்திக்கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுபற்றி அக்கம்பக்கத்து தோட்டத்து விவசாயிகளிடம் கூறினார்.
1 ஏக்கர் நாசம்
அதைத்தொடர்ந்து அனைவரும் அங்கு வந்து பட்டாசு வெடித்து யானையை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் நேற்று அதிகாலை 4 மணி வரை விடிய விடிய காட்டுயானை பயிர்களை நாசம் செய்து அட்டகாசத்தில் ஈடுபட்டது. அதன் பின்னர் அந்த யானை காட்டுக்குள் சென்றது. மொத்தம் 1 ஏக்கர் பரப்பளவிலான முட்டைக்கோஸ் பயிர் நாசமானது.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, 'தினமும் யானைகள் விவசாயப்பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் உழைப்பு வீணாவதுடன், வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் யானைகள் சொட்டுநீர் பாசன குழாய் உடைப்பு மற்றும் தென்னை, வாழை என பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை சேதப்படுத்தியுள்ளது' என்றனர்.