கள்ளிப்பட்டி அருகே காட்டு யானையை பிடிக்க வரவழைக்கப்பட்ட 2 கும்கிகளை முதுமலைக்கு திருப்பி அனுப்பி வைத்த வனத்துறையினர்


கள்ளிப்பட்டி அருகே காட்டு யானையை பிடிக்க வரவழைக்கப்பட்ட 2 கும்கிகளை முதுமலைக்கு திருப்பி அனுப்பி வைத்த வனத்துறையினர்
x

கள்ளிப்பட்டி அருகே காட்டு யானையை பிடிக்க வரவழைக்கப்பட்ட 2 கும்கிகளை முதுமலைக்கு வனத்துறையினர் திருப்பி அனுப்பி வைத்தனர்.

ஈரோடு

டி.என்.பாளையம்

கள்ளிப்பட்டி அருகே காட்டு யானையை பிடிக்க வரவழைக்கப்பட்ட 2 கும்கிகளை முதுமலைக்கு வனத்துறையினர் திருப்பி அனுப்பி வைத்தனர்.

காட்டு யானை விரட்டியடிப்பு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆண் காட்டு யானை வெளியேறி டி.என்.பாளையம் கள்ளிப்பட்டி அருகே உள்ள வரப்பள்ளம் ஆற்றங்கரையோர விவசாய தோட்ட பகுதியில் சுற்றித்திரிந்தது. அப்போது அடசபாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் கூலி வேலை செய்து கொண்டிருந்த துரை என்கிற சித்தேஷ்வரன் என்பவரை மிதித்து கொன்றது.

இதையடுத்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு அறிவுறுத்தலின் பேரில் அந்தியூர் வனச்சரகர் உத்திரசாமி மற்றும் டி.என்.பாளையம் வனச்சரகர் கணேஷ் பாண்டியன் தலைமையிலான வனத்துறையினர் அந்த காட்டு யானையை பெருமுகை வனப்பகுதிக்குள் விரட்டி அனுப்பினர்.

கும்கி யானைகள் வரவழைப்பு

எனினும் அந்த காட்டு யானை மீண்டும் ஊருக்குள் வந்து உயிர் தேசத்தை ஏற்படுத்தி விடுமோ? என்று மக்கள் அச்சப்பட்டனர். இதனால் அந்த காட்டு யானையை பிடித்து வேறு வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் முடிவு செய்தனர்.

தொடர்ந்து காட்டு யானையை பிடிக்க முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு லாரிகளில் பொம்மன், சீனிவாசன் என்ற 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. பின்னர் இவற்றை பெருமுகை சஞ்சீவிராயன் கோவில் அருகே உள்ள உரம்புகிணறு மாரியம்மன் கோவில் பகுதியில் கட்டி வைத்து உணவு கொடுத்து வந்தனர்.

முதுமலைக்கு திருப்பி அனுப்பினர்

மேலும் பெருமுகை வனப்பகுதியில் டிரோன் கேமரா மூலமாக அந்த காட்டு யானையை கண்காணிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஆனால் காட்டு யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றதால் பிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் 2 கும்கி யானைகளையும் முதுமலை தெப்பக்காடு முகாமுக்கே திருப்பி அனுப்ப அந்தியூர் வனத்துறையினர் முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து நேற்று காலை 2 லாரிகளில் கும்கி யானைகளை ஏற்றி முதுமலை தெப்பக்காடு முகாமுக்கு வனத்துறையினர் அனுப்பி வைத்தனர்.

அடர்ந்த வனப்பகுதிக்குள்...

இதுகுறித்து அந்தியூர் வனச்சரகர் உத்திரசாமி கூறும்போது, 'விவசாய கூலி தொழிலாளியை கொன்ற காட்டு் யானையை பிடிக்க கடந்த 6-ந்தேதி முதல் பெருமுகை வனப்பகுதியில் பல்வேறு இடங்களில் டிரோன் கேமரா மூலமாக இரவு பகலாக கண்காணித்து வந்தோம். ஆனால் டிரோன் கேமராவில் காட்டு யானை சிக்கவில்லை. கேமராவில் தென்படாத வகையில் காட்டு யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று இருக்கலாம். அதனால் வரவழைக்கப்பட்ட பொம்மன், சீனிவாசன் ஆகிய 2 கும்கி யானைகளை முதுமலை முகாமுக்கு திருப்பி அனுப்பினோம்' என்றார்.


Next Story