சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது; பாதுகாப்புக்காக துப்பாக்கிகளுடன் சென்ற வனத்துறையினர்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது. மேலும் வனத்துறையினர் பாதுகாப்புக்காக துப்பாக்கிகளுடன் வனப்பகுதிக்குள் சென்றனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது. மேலும் வனத்துறையினர் பாதுகாப்புக்காக துப்பாக்கிகளுடன் வனப்பகுதிக்குள் சென்றனர்.
யானைகள் கணக்கெடுக்கும் பணி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட சத்தியமங்கலம் வனப்பகுதியில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை வனத்துறையினர் யானைகள் கணக்கெடுப்பார்கள். அதன்படி இந்த ஆண்டு கணக்கெடுப்பு பணிக்காக அந்தியூர் வனத்துறை அலுவலகத்தில் பயிற்சி நடந்தது.
முதல் நாள் நேர்கோட்டில் இருந்து 15 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று யானைகளை நேரில் பார்த்தும் மற்றும் பாத சுவடுகள், கழிவுகள் போன்றவற்றை வைத்தும் கணக்கெடுப்பது, 2-வது நாள் நேர்கோட்டுப் பகுதியில் இருந்து 5 மீட்டர் சுற்றளவில் உள்ள பாதசுவடுகள் கழிவுகள் உள்ளிட்டவற்றை வைத்து கணக்கெடுப்பது, 3-வது நாள் வனப்பகுதியில் உள்ள குளம், குட்டை உள்ளிட்ட நீர்த்தேக்க பகுதிகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரே இடத்தில் அமர்ந்து தண்ணீர் குடிக்க வரும் யானைகளை கணக்கெடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
துப்பாக்கிகளுடன்...
அதன்படி நேற்று காலை 7 மணி அளவில் சத்தியமங்கலம் வனப்பகுதிக்குட்பட்ட பண்ணாரி அருகே வனத்துறையினர் சென்று யானைகள் கணக்கெடுப்பு பணியை தொடங்கினார்கள். சத்தியமங்கலம் வனச்சரகர் பழனிச்சாமி தலைமையில் வனவர் வெங்கடேஷ் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் 5 குழுக்களாக பிரிந்து இந்த கணக்கெடுப்பு பணியை நடத்தினார்கள். வனத்துறையினர் பாதுகாப்புக்காக துப்பாக்கிகளுடன் சென்று கணக்கெடுப்பில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் ஈரோடு வனக்கோட்டத்துக்குட்பட்ட அந்தியூர், பர்கூர், தட்டகரை, சென்னம்பட்டி வனச்சரகங்கள் மற்றும் சேலம் கோட்டத்துக்குட்பட்ட மேட்டூர் வனச்சரகத்தில் வனத்துறையினர் யானைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் குழுக்களாக சென்று பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தாளவாடி, பவானிசாகர்
தாளவாடி, கேர்மாளம், ஆசனூர், தலமலை, ஜீர்கள்ளி, கடம்பூர் வனச்சரகங்களிலும் யானைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது. இந்த பணியில் 300 பேர் பல்வேறு குழுக்களாக பிரிந்து ஈடுபட்டனர். ஒரு குழுவில் வனவர், வேட்டை தடுப்பு காவலர், தன்னார்வலர் என 3 பேர் இடம்பெற்றிருந்தனர்.
பவானிசாகர் வனச்சரகத்துக்குட்பட்ட 9 பீட்டுகளில் பவானிசாகர் வனச்சரகர் சிவக்குமார் தலைமையில் வனத்துறையினர் 50 பேர் பல்வேறு குழுக்களாக பிரிந்து யானைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். அப்போது யானைகளை அதிகம் பார்த்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
டி.என்.பாளையம்
டி.என்.பாளையம் வனச்சரகத்தில் வனச்சரகர் கணேஷ் பாண்டியன் தலைமையில் வேட்டை தடுப்பு காவலர்கள், வனக்காவலர்கள், வனக்காப்பாளர்கள், வனவர்கள் ஆகியோர் கணக்கெடுப்பு பணியை நடத்தினார்கள். நேற்று ஒரே நேர்க்கோட்டில் நடந்து சென்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
நாளை (வெள்ளிக்கிழமை) வரை 3 நாட்கள் யானைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா? என்பதை பற்றிய விவரங்கள் தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.