வனப்பகுதிகளில் 250 யானைகள் முகாம்


வனப்பகுதிகளில் 250 யானைகள் முகாம்
x
தினத்தந்தி 5 Dec 2022 12:15 AM IST (Updated: 5 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் 250-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளதால் கிராமமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் 250-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளதால் கிராமமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

யானைகள் முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்திற்கு, கர்நாடக மாநிலத்தில் உள்ள பன்னார்கட்டா தேசிய பூங்கா மற்றும் காவிரி வன உயிரின சரணாலயத்தில் இருந்து கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் 250-க்கும் மேற்பட்ட யானைகள் தமிழக வனப்பகுதிக்குள் புகுந்தன. இந்த யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து தளி, ஜவளகிரி, நொகனூர், தேன்கனிக்கோட்டை, ஊடேதுர்க்கம், சானமாவு, குருபரப்பள்ளி, மகராஜகடை, வேப்பனப்பள்ளி ஆகிய வனப்பகுதிகளில் முகாமிட்டு உள்ளன.

இந்த யானைகள் கூட்டம் இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகிலுள்ள கிராம விவசாய நிலங்களில் புகுந்து ராகி, நெல், வாழை, தக்காளி, சோளம் மற்றும் தென்னை உள்ளிட்ட பயிர்களை தின்றும், சேதப்படுத்தியும் வருகின்றன. இந்த யானை கூட்டங்களை, வனப்பணியாளர்கள், வேட்டைத் தடுப்பு காவலர்கள் மற்றும் அதிவிரைவு மீட்பு குழுவினர் விரட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

வனத்துறையினர் எச்சரிக்கை

மேலும், வன ஊழியர்கள் ஒலிப்பெருக்கிகள் மூலம் பொதுமக்கள் காப்புக்காட்டிற்கு கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல வேண்டாம். விவசாய நிலங்களுக்கு இரவு காவலுக்கு செல்ல வேண்டாம். விறகு சேகரிக்கவும், கால்நடைகளை மேய்க்கவும் வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம். இரவு நேரங்களில் வீட்டின் வெளியில் மின் விளக்குகளை ஒளிர விட வேண்டும் என்று கிராம மக்களுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தினர்.

மேலும், விவசாய நிலங்களை சுற்றி மின்வேலி அமைப்பதை தவிர்க்க வேண்டும். மின்வேலி அமைத்தது கண்டுபிடிக்கப்பட்டால், வன உரியின பாதுகாப்பு சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிகளில் யானைகள் முகாமிட்டுள்ளதால் கிராமமக்கள் பீதி அடைந்துள்ளனர்.


Next Story