எம்.ஆர்.பாளையம், திருவானைக்காவலில் யானைகள் தினம் கொண்டாட்டம்
எம்.ஆர்.பாளையம், திருவானைக்காவலில் யானைகள் தினம் கொண்டாட்டப்பட்டது.
சமயபுரம் அருகே உள்ள எம்.ஆர்.பாளையம் காப்பு காட்டில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் யானைகள் மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. சட்டவிரோதமாக தனியாரால் வளர்க்கப்பட்ட யானைகள் மற்றும் உரிய பராமரிப்பு இல்லாத கோவில் யானைகள் நீதிமன்ற உத்தரவின்படி அங்கு கொண்டுவரப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று உலக யானைகள் தினத்தை முன்னிட்டு திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ், மாவட்ட வன அலுவலர் கிரண் அறிவுரையின்படி உதவி வனப்பாதுகாவலர் சம்பத்குமார் தலைமையில் வனச்சரக அலுவலர்கள் சுப்பிரமணியம், கோபிநாத், கிருஷ்ணன், தினேஷ்குமார், ரவி மற்றும் வனப்பணியாளர்களால் எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் உணவு மற்றும் பழ வகைகள் படைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் அங்கு பராமரிக்கப்பட்டு வரும் யானைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.
இதேபோல் திருவானைக்காவல் கோவிலில் உள்ள யானை அகிலாவிற்கு பள்ளி மாணவ-மாணவிகள் கரும்பு, கேரட், வாழைப்பழம், பேரீச்சை பழம் உள்ளிட்ட பழ வகைகளை கொடுத்து கொண்டாடினர். பின்னர் யானை அகிலாவுடன் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இதுகுறித்து கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் கூறுகையில், சிவபெருமானை யானை வழிபட்டு முக்தி பெற்ற தலம் இந்த தலம். இங்கு யானைகள் தினம் கொண்டாடப்படுவது தனி சிறப்பு என்றார்.