இனச்சேர்க்கைக்கு மறுத்ததால் பெண் யானையை தந்தத்தால் குத்தி கொன்ற ஆண் யானை
பாலக்கோடு:
பாலக்கோடு காப்புக்காட்டில் இனச்சேர்க்கைக்கு மறுத்ததால் பெண் யானையை, ஆண் யானை தந்தத்தால் குத்தி கொன்றது.
பெண் யானை சாவு
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வனப்பகுதியில் யானை, கரடி, காட்டுப்பன்றி, மான், குரங்கு உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இந்தநிலையில் பாலக்கோடு அருகே உள்ள கேசர்குளி காப்புக்காட்டில் 22 வயது மதிக்கத்தக்க பெண் யானை செத்து கிடந்தது. இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பாலக்கோடு வனச்சரகர் நடராஜன் மற்றும் வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் யானையின் உடலை பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.
இனச்சேர்க்கைக்கு மறுப்பு
அப்போது ஆண் யானை தந்தத்தால் குத்தியதில், பெண் யானை உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் இனச்சேர்க்கைக்கு மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரம் அடைந்த ஆண் யானை, பெண் யானையை தந்தத்தால் குத்தி கொன்றிருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதையடுத்து யானையின் உடலை மாவட்ட வன அலுவலர் அப்பல்ல நாயுடு, கன்சால்பைல் கிராம திட்ட தலைவர் பச்சியப்பன் ஆகியோர் முன்னிலையில் வன கால்நடை டாக்டர் பிரகாஷ் பிரேத பரிசோதனை செய்தார். பின்னர் அங்கேயே குழி தோண்டி யானையின் உடல் புதைக்கப்பட்டது.