யானைகளுக்கு இடையே நடந்த சண்டையில் பெண் யானை சாவு
உரிகம் அருகே யானைகளுக்கு இடையே நடந்த சண்டையில் காயம் அடைந்த பெண் யானை பரிதாபமாக இறந்தது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை
உரிகம் அருகே யானைகளுக்கு இடையே நடந்த சண்டையில் காயம் அடைந்த பெண் யானை பரிதாபமாக இறந்தது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் யானை பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டம் காவேரி தெற்கு வன உயிரின சரணாலயத்தில் உரிகம் வனச்சரகம் உள்ளது. இங்குள்ள காட்டில் உன்சேபச்சிகொல்லை சரக பகுதியில் நேற்று வன ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது. இது குறித்து வன பணியாளர்கள் ஓசூர் வன கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனிக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அவருடைய தலைமையில் உதவி வன பாதுகாவலர் ராஜமாரியப்பன், உரிகம் வனச்சரக அலுவலர் வெங்கடாசலம் மற்றும் சரக வன ஊழியர்கள் அங்கு விரைந்து சென்றனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்ததும் தர்மபுரி மண்டல வன பாதுகாவலர் பெரியசாமி சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த யானையை பார்வையிட்டார்.
யானைகளுக்கு இடையே சண்டை
இதைத்தொடர்ந்து ஓசூர் வன கால்நடை உதவி மருத்துவர் பிரகாஷ் தலைமையில் மருத்துவ குழுவினர் அங்கேயே யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். சுமார் 4 மணி நேரம் இந்த பிரேத பரிசோதனை நடந்தது. அதில் யானைக்கு 36 முதல் 38 வயது இருந்ததும், யானையின் உடலில் வெளிப்பகுதியில் காயங்கள் இருந்ததும் தெரியவந்தது.
காட்டில் யானைகளுக்கு இடையே சண்டை நடந்ததும், இதில் பெண் யானை காயம் அடைந்து இறந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் குழிதோண்டி யானையின் உடல் புதைக்கப்பட்டது.
பாதுகாப்பாக இருக்க வேண்டும்
இதுகுறித்து ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி கூறுகையில், 'உரிகம் வனச்சரகத்தில் தற்போது 70-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இவற்றின் நடமாட்டத்தை வனப்பணியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். காப்புகாடுகளை விட்டு யானைகள் வெளியே வரும் போது மீண்டும் அவைகளை பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் வனப்பகுதியையொட்டி உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்' என்றார்.