மின்சாரம் தாக்கி ஆண் யானை சாவு
ராயக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி ஆண் யானை பரிதாபமாக இறந்தது.
ராயக்கோட்டை
ராயக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி ஆண் யானை பரிதாபமாக இறந்தது.
யானைகள் அட்டகாசம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, குருபரப்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் 3 யானைகள் கடந்த 4 மாதங்களாக சுற்றி வந்தன. இந்த யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வந்தன.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகில் சுற்றித்திரிந்த யானைகளை வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து வனப்பகுதிக்கு விரட்டினர். இதையடுத்து அந்த யானைகள் ராயக்கோட்டை வனச்சரகம் ஊடேதுர்க்கம் காட்டில் முகாமிட்டு இருந்தன. இந்த யானைகள் ராகி, முட்டைகோஸ் உள்ளிட்ட விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தன.
யானை சாவு
இந்த நிலையில் நேற்று காலை கிருஷ்ணகிரி-ராயக்கோட்டை சாலையில் வெலகலஅள்ளி அருகே உள்ள வெங்கடப்பன் கொட்டாய் என்ற இடத்தில் மாந்தோப்பில் ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது. அதன் உடலில் மின் ஒயர் சுற்றிய நிலையில் இருந்தது. இது குறித்து கிராமமக்கள் ராயக்கோட்டை வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி, உதவி வன பாதுகாவலர் ராஜ மாரியப்பன், ராயக்கோட்டை வனச்சரக அலுவலர் பார்த்தசாரதி, வனவர்கள் சரவணன், செந்தில்நாதன், வனக்காப்பாளர் புட்டுகான் மற்றும் வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் இறந்து கிடந்த யானையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது இறந்து போன யானைக்கு 15 முதல் 20 வயதிற்குள் இருக்கும் என தெரியவந்தது.
மின்ஒயரில் சிக்கி இறந்தது
இந்த யானை, கிருஷ்ணகிரி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 4 மாதங்களாக சுற்றித்திரிந்த 3 யானைகளில் ஒன்றாகும். இந்த யானை மேலும் 2 யானைகளுடன் அந்த பகுதிக்கு வந்துள்ளது. மாந்தோப்பிலும், அருகில் உள்ள தென்னந்தோப்பிலும் சுற்றி ஓலைகள், மா இலைகளை 3 யானைகளும் தின்றுள்ளன.
அப்போது அப்பகுதியில் கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சி அனுப்புவதற்காக ஒயர் ஒன்று சென்று இருந்தது. அந்த ஒயர் யானையின் காலில் சிக்கவே, அதில் இருந்து விடுபட யானை முயன்றபோது, மின்சாரம் தாக்கி இறந்தது தெரியவந்தது.
இன்று பிரேத பரிசோதனை
இதையடுத்து யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவ குழுவினர் கோவையில் உள்ளனர். அவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) கிருஷ்ணகிரிக்கு வர உள்ளனர். அதனால் இன்று காலை 10 மணிக்கு யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்து புதைக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
யானையின் உடல் கிடந்த இடத்தில் வனத்துறையினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ராயக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.