முதுமலையில் யானை பொங்கல் கோலாகலம்


முதுமலையில் யானை பொங்கல் கோலாகலம்
x
தினத்தந்தி 17 Jan 2023 12:15 AM IST (Updated: 17 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

முதுமலையில் யானை பொங்கல் கோலாகலமாக நடந்தது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

நீலகிரி

கூடலூர்,

முதுமலையில் யானை பொங்கல் கோலாகலமாக நடந்தது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

வளர்ப்பு யானைகள்

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு, அபயாரண்யம் முகாம்களில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதூர்த்தி, சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம், பொங்கல் உள்ளிட்ட முக்கிய விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று மாலை 6 மணிக்கு முதுமலை தெப்பக்காட்டில் வளர்ப்பு யானைகளுடன் வனத்துறையினர் மற்றும் அதிகாரிகள் பொங்கல் விழாவை கோலாகலமாக கொண்டாடினர்.

இதையொட்டி முகாம் வளாகத்தில் தோரணங்கள் கட்டி அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து வளர்ப்பு யானைகள் மாயாற்றில் குளிப்பாட்டப்பட்டு, மாலைகள் அணிவித்து அலங்கரிக்கப்பட்டது. பின்னர் வரிசையாக வளர்ப்பு யானைகள் நிறுத்தப்பட்டன. விழாவில் கலெக்டர் அம்ரித், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், புலிகள் காப்பக துணை இயக்குனர்கள் வித்யா, அருண் குமார் உள்ளிட்ட அதிகாரிகள், தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

பொங்கலிட்டு கொண்டாட்டம்

தொடர்ந்து 5 வெண்கல பானைகளில் அதிகாரிகள் குடும்பத்தினர் பொங்கலிட்டனர். முன்னதாக ஆதிவாசி மக்கள் பாரம்பரிய இசை கருவிகள் இசைத்து நடனம் ஆடினர். அவர்களுடன் போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட அதிகாரிகள் குடும்பத்தினர் நடனமாடினர். பின்னர் வளர்ப்பு யானைகளுக்கு கலெக்டர் அம்ரித் பொங்கல், கரும்புகள் மற்றும் பழங்களை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ், போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் ஆகியோர் வளர்ப்பு யானைகளுக்கு கரும்புகள், வாழை, அன்னாசி, மாதுளை, வெல்லம், தேங்காய், ராகி கழி உள்ளிட்ட உணவுகளை வழங்கினர். பின்னர் உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்துகொண்டு யானை பொங்கலை கண்டு ரசித்ததோடு, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.


Next Story