சுற்றுலா பயணிகளை கவர்ந்த யானை உருவச்சிலைகள்


சுற்றுலா பயணிகளை கவர்ந்த யானை உருவச்சிலைகள்
x

கொடைக்கானல் பில்லர்ராக் பகுதியில் உள்ள யானை உருவச்சிலைகள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.

திண்டுக்கல்

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு வாரவிடுமுறையையொட்டி நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள கோக்கர்ஸ் வாக், மோயர் பாயிண்ட், பில்லர்ராக், பைன்மரக்காடு, பேரிஜம் ஏரி உள்ளிட்ட சுற்றுலா இடங்களை பார்த்து ரசித்தனர். கொடைக்கானலில் நேற்று சீதோஷ்ண சூழல் நிலவியது. இதனை சுற்றுலா பயணிகள் அனுபவித்து மகிழ்ந்தனர். இதற்கிடையே கொடைக்கானல் பில்லர்ராக் பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் குட்டிகளுடன் 3 யானைகள் நிற்பது போன்று உருவச்சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகளை பார்த்த சுற்றுலா பயணிகள், அவற்றின் முன்பு நின்றபடி தங்களது செல்போன், கேமராவில் புகைப்படம் மற்றும் 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர்.

கொடைக்கானல் மோயர் பாயிண்ட் பகுதியில் ஏற்கனவே காட்டெருமை உருவச்சிலை வைக்கப்பட்டுள்ளது. தற்போது பில்லர்ராக் பகுதியில் யானை உருவச்சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக இதுபோன்று வனவிலங்குகளின் உருவச்சிலைகளை வைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story