திருபுவனத்தில், யானை சிலை கண்டெடுப்பு
திருபுவனத்தில் சாலை அகலப்படுத்தும் பணிக்காக பள்ளம் தோண்டிய போது யானை சிலை கண்டெடுக்கப்பட்டது.
திருவிடைமருதூர்:
திருபுவனத்தில் சாலை அகலப்படுத்தும் பணிக்காக பள்ளம் தோண்டிய போது யானை சிலை கண்டெடுக்கப்பட்டது.
சாலை அகலப்படுத்தும் பணி
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில் கடந்த சில மாதங்களாக சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
அதன்படி நேற்று மாலை திருபுவனம் கடைவீதியில் பொக்லின் எந்திரம் மூலம் சாலை அகலப்படுத்தும் பணிக்காக பள்ளம் தோண்டும் பணி நடந்தது.
யானை சிலை கண்டெடுப்பு
அப்போது அந்த பள்ளத்தில் யானை சிலை கிடைத்தது. கருங்கல்லினால் ஆன இந்த யானை சிலையை பார்த்ததும், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து சிலையை பார்த்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவிடைமருதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த யானை சிலையை பொக்லின் எந்திரம் மூலம் திருவிடைமருதூர் தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
தாசில்தாரிடம் ஒப்படைப்பு
பின்னர் அந்த யானை சிலையை தாசில்தார் சுசீலாவிடம் ஒப்படைத்தனர். அந்த சிலை தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.