ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்
பென்னாகரம் அருகே ஊருக்குள் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்ததால் கிராமமக்கள் அலறி அடித்து ஓடினர்.
பென்னாகரம்:
பென்னாகரம் அருகே ஊருக்குள் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்ததால் கிராமமக்கள் அலறி அடித்து ஓடினர்.
காட்டு யானைகள்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள தாசம்பட்டி, கோடுப்பட்டி, பவளந்தூர் உள்ளிட்ட பகுதிகள் வனப்பகுதியையொட்டி உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த 2 காட்டு யானைகள் பாப்பாரப்பட்டி அருகே உள்ள திகிலோடு கிராமத்தில் சுற்றித்திரிந்தன. இந்த யானைகளை கிராம மக்கள் விரட்டினர்.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு இந்த யானைகள் பென்னாகரம் அருகே உள்ள பவளந்தூர், தாசம்பட்டி ஆகிய கிராமங்களில் புகுந்தன. இரவு நேரங்களில் விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வந்த 2 யானைகளும் நேற்று பவளந்தூர் ஊருக்குள் புகுந்தன. இந்த யானைகள் கிராம மக்களை விரட்டின. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அலறி அடித்து ஓடினர்.
கோரிக்கை
இதுகுறித்து கிராமமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த யானைகளை கோடுப்பட்டி வனப்பகுதிக்கு விரட்டினர். யானைகள் மீண்டும் ஊருக்குள் புகாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஊருக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.