சிப்காட் பகுதிக்குள் புகுந்த 3 காட்டு யானைகள்
குருபரப்பள்ளி சிப்காட் பகுதிக்குள் 3 காட்டு யானைகள் வந்ததால் அவற்றை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
குருபரப்பள்ளி:
குருபரப்பள்ளி சிப்காட் பகுதிக்குள் 3 காட்டு யானைகள் வந்ததால் அவற்றை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
3 காட்டு யானைகள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3-ல் ஒரு பங்கு வனப்பகுதி உள்ளது. இதில் யானைகள் அதிக அளவில் உள்ளன. இந்த யானைகள் அடிக்கடி ஊருக்குள் வந்து விவசாய பயிர்களை நாசம் செய்வது தொடர்ந்து நடந்து வருகின்றது.இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக கிருஷ்ணகிரி அருகே உள்ள சோக்காடி, பனகமுட்லு உள்ளிட்ட கிராமங்களையொட்டி உள்ள வனப்பகுதியில் 3 காட்டு யானைகள் முகாமிட்டு இருந்தன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிக்கனப்பள்ளி, மேலுமலை வனப்பகுதிக்கு வந்த இந்த யானைகள் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தி வந்தன.
ஆனந்த குளியல்
இந்தநிலையில் நேற்று காலை அந்த யானைகள் குருபரப்பள்ளி சிப்காட் பகுதிக்குள் புகுந்தன. இந்த யானைகளை கண்டதும் அங்கிருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் அங்கு சென்று யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவற்றை விரட்ட முடியவில்லை.
முன்னதாக இந்த 3 யானைகளும் சிப்காட் எதிரில் உள்ள கக்கன்புரம் ஏரிக்கு சென்று ஆனந்த குளியல் போட்டன. அப்ேபாது அங்கு மழை பெய்தது. மழையில் நனைந்தபடி ஏரியில் 3 யானைகளும் குளியல் போட்டன. இதை அந்த பகுதி பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். தற்போது குருபரப்பள்ளி சிப்காட் பகுதியில் இந்த யானைகள் முகாமிட்டுள்ளன. இவற்றை பட்டாசுகள் வெடித்தும், மேளங்கள் அடித்தும் பிக்கனப்பள்ளி மற்றும் மேலுமலை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
வனத்துறையினர் உஷார்
இதற்காக வனச்சரகர் பார்த்திசாரதி தலைமையில் 25-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் யானைகளை கண்காணித்து வருகிறார்கள். யானைகள் கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் குருபரப்பள்ளி சிப்காட் பகுதியில் முகாமிட்டுள்ளன. சாலையில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவிலேயே யானைகள் இருப்பதால் தேசிய நெடுஞ்சாலைக்கு யானைகள் வந்து விடக்கூடாது என்பதற்காக வனத்துறையினர் உஷார் நிலையில் உள்ளனர்.