100 காட்டு யானைகள் முகாம்
கர்நாடகாவில் இருந்து இடம் பெயர்ந்த 100 காட்டு யானைகள் ஜவளகிரி உள்பட 4 வனப்பகுதிகளில் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
தேன்கனிக்கோட்டை:
கர்நாடகாவில் இருந்து இடம் பெயர்ந்த 100 காட்டு யானைகள் ஜவளகிரி உள்பட 4 வனப்பகுதிகளில் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
யானைகள் முகாம்
கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 150-க்கும் மேற்பட்ட யானைகள் ஜவளகிரி வனச்சரக பகுதிக்கு இடம் பெயர்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான இடம் பெயர்வு கடந்த மாதம் தொடங்கியது.
கர்நாடக மாநிலத்தில் இருந்து பல்வேறு குழுக்களாக 100-க்கும் மேற்பட்ட யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஜவளகிரி வனச்சரக பகுதிக்கு இடம் பெயர்ந்து முகாமிட்டுள்ளன.
இந்தநிலையில் ஜவளகிரி வனச்சரக பகுதியில் இருந்து 25-க்கும் மேற்பட்ட யானைகள் தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு சென்றன. அதேபோல் ராயக்கோட்டை வனச்சரகத்திற்கு 20 யானைகளும், ஓசூர் வனச்சரகத்திற்கு 15 யானைகளும் இடம் பெயர்ந்துள்ளன.
எச்சரிக்கை
இதனால் ஜவளகிரி வனச்சரக பகுதியில் தற்போது 40-க்கும் மேற்பட்ட யானைகள் சுற்றித்திரிகின்றன. இந்த யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதையடுத்து அந்த பகுதிகளுக்கு யாரும் செல்லவேண்டாம் என்று வனப்பகுதியை ஒட்டியுள்ள மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோல் ராயக்கோட்டை வனச்சரகர் பார்த்தசாரதி, தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேசன், ஓசூர் வனச்சரகர் ரவி, ஜவளகிரி வனச்சரகர் சுகுமார் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் தங்களது வனச்சரக பகுதியில் உள்ள யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். வனப்பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சுற்றித்திரிவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.