சாமஏரிக்கு தாகம் தணிக்க வந்த 70 காட்டு யானைகள்


சாமஏரிக்கு தாகம் தணிக்க வந்த 70 காட்டு யானைகள்
x
தினத்தந்தி 8 Dec 2022 12:15 AM IST (Updated: 8 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தளி அருகே அய்யூர் வனப்பகுதிக்கு வந்த 70 காட்டு யானைகள் சாமஏரியில் தண்ணீர் குடித்தும், ஆனந்த குளியல் போட்டும் மகிழ்ந்தன.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

தளி அருகே அய்யூர் வனப்பகுதிக்கு வந்த 70 காட்டு யானைகள் சாமஏரியில் தண்ணீர் குடித்தும், ஆனந்த குளியல் போட்டும் மகிழ்ந்தன.

யானைகள் முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இதைத் தவிர கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து ஆண்டுதோறும் 100-க்கும் மேற்பட்ட யானைகள் அக்டோபர், நவம்பர் மாதங்களில் வருவது வழக்கம்.

ராகி பயிர் அறுவடையை குறி வைத்து வரும் இந்த யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து தேன்கனிக்கோட்டை, ஓசூர், ஜவளகிரி, சானமாவு, போடூர்பள்ளம், ஊடேதுர்க்கம் வனப்பகுதிகளில் முகாமிட்டு விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி செல்லும்.

தண்ணீர் குடித்து செல்கின்றன

இந்த ஆண்டும் வழக்கம் போல 100-க்கும் மேற்பட்ட யானைகள் கர்நாடக வனப்பகுதியில் இருந்து தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் வந்துள்ளன. தளி அருகே அய்யூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஏற்கனவே 50 யானைகள் உள்ளன. அவற்றுடன் கர்நாடகாவில் இருந்து வந்த யானைகளில் இருந்து 20 யானைகள் பிரிந்து அய்யூர் வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன.

இந்த 70 யானைகளும் சாமஏரியில் தண்ணீர் குடித்தும், குளித்தும் மகிழ்கின்றன. சாமஏரியில் தண்ணீர் குடிக்க வரும் யானைகள் கூட்டத்தை அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பார்த்து செல்கிறார்கள். இவர்களில் சிலர் செல்போன்களில் யானைகளை படம் பிடித்து வருகிறார்கள். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து சென்று யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

வனப்பகுதிக்குள் வரவேண்டாம்

இதுபற்றி வனத்துறையினர் கூறுகையில், யானைகள் கூட்டம் பல குழுக்களாக பிரிந்துள்ளன. அவற்றின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம். வனப்பகுதிக்குள் பொதுமக்கள் யாரும் ஆடு, மாடுகளை மேய்க்க வர வேண்டாம். மேலும் இரவு நேரத்தில் வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களில் காவலுக்கு செல்ல வேண்டாம் என்றனர்.


Next Story