சானமாவு வனப்பகுதியில் 60 யானைகள் முகாம்
ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் ஒரே இடத்தில் 60 யானைகள் முகாமிட்டுள்ளதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஓசூர்
ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் ஒரே இடத்தில் 60 யானைகள் முகாமிட்டுள்ளதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
யானைகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதிக்கு கடந்த 2 நாட்களுக்கு முனபு தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து 14-க்கும் மேற்பட்ட யானைகள் வந்தன. ஏற்கனவே 4 யானைகள் முகாமிட்டிருந்த நிலையில், தற்போது குட்டிகளுடன் மேலும் யானைகள் இடம் பெயர்ந்துள்ளதால் சானமாவு வனப்பகுதியில் யானைகளின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது.
இந்த யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் புகுந்து, அங்குள்ள விளைநிலங்களை சேதப்படுத்திவிட்டு அதிகாலையில் மீண்டும் வனப்பகுதிக்கு சென்று பதுங்கி விடுகின்றன. நேற்று முன்தினம் இரவு சானமாவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் அருகிலுள்ள நாயக்கனபள்ளி கிராம பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து தக்காளி, முட்டைகோஸ் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தின.
வனத்துறையினர் எச்சரிக்கை
இதுகுறித்து பொதுமக்கள், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வன ஊழியர்கள், விரைந்து வந்து பட்டாசு வெடித்து யானைகளை விரட்டினர். தற்போது சானமாவு வனப்பகுதியில் ஒரே இடத்தில் 60 யானைகள் முகாமிட்டுள்ளதால் சினிகிரிப்பள்ளி, ராமாபுரம், அம்பலட்டி, ஆழியாளம் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
எனவே, விவசாயிகள் இரவு நேரங்களில் வயலுக்கு காவலுக்கு செல்ல வேண்டாம். வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.