2 யானைகள் ஓசூர் வனப்பகுதியில் விடப்பட்டன


2 யானைகள் ஓசூர் வனப்பகுதியில் விடப்பட்டன
x

திருப்பத்தூரில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட 2 யானைகள் ஓசூர் வனப்பகுதியில் விடப்பட்டன.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வனப்பகுதியில் இருந்து 2 ஆண் யானைகள் கடந்த மார்ச் மாதம் வெளியேறின. இந்த யானைகள் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வந்தன. மேலும் கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அருகே காட்டுகொல்லை கிராமத்தில் ராம்குமார் என்பவரையும், கடந்த மாதம் (ஏப்ரல்) 21-ந் தேதி தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே வட்டகானம்பட்டி ஏரிகொட்டாய் கிராமத்தில் காளியப்பன் (70) என்பவரையும், 27-ந் தேதி காரிமங்கலம் அருகே உள்ள பெரிய மொரசுப்பட்டியை சேர்ந்த வேடி (55) என்பவரையும் இந்த யானைகள் தாக்கி கொன்றன. இதன் தொடர்ச்சியாக கடந்த 6-ந் தேதி கிருஷ்ணகிரி நகருக்குள் வந்த இந்த யானைகள் அவதானப்பட்டியில் ஏரியில் முகாமிட்டு இருந்தன. தொடர்ந்து 7-ந் தேதி கிருஷ்ணகிரி அருகே சாமந்தமலையில் பெருமாள் என்ற விவசாயியை இந்த யானைகள் தாக்கி கொன்றன. அதன் பிறகு ஆந்திர வனப்பகுதிக்கு விரட்டப்பட்ட யானைகள் அங்கு கடந்த 12-ந் தேதி உஷா, சிவலிங்கம் ஆகிய 2 பேரை தாக்கி கொன்றன. மொத்தம் 6 பேரை கொன்ற யானைகளை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்தனர்.

இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சென்ற யானைகள் அங்கு கடந்த 6 நாட்களாக அட்டகாசம் செய்து வந்தன. இதையடுத்து அந்த 2 யானைகளையும் மயக்க ஊசி போட்டு பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக பொள்ளாச்சி, முதுமலையில் இருந்த பயிற்சி பெற்ற 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன.தொடர்ந்து நேற்று முன்தினம் திருப்பத்தூர் அருகே திப்பசமுத்திரம் ஏரியில் இருந்த 2 யானைகளையும் வனத்துறையினர் மயக்க ஊசி போட்டு பிடித்தனர். பின்னர் யானைகள் லாரியில் ஏற்றப்பட்டன. தொடர்ந்து இரவு திருப்பத்தூரில் இருந்து அந்த 2 யானைகளும் ஓசூர் வனக்கோட்டம் காவேரி தெற்கு வன உயிரின சரணாலயத்திற்கு கொண்டு வரப்பட்டு பிலிக்கல் காப்புக்காட்டில் விடப்பட்டன.

லாரியில் இருந்து இறங்கியதும் 2 யானைகளும், வனப்பகுதிக்குள் சென்றன. இந்த யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். கடந்த 3 மாதங்களாக வனப்பகுதியை விட்டு வெளியே சுற்றி வந்த 2 யானைகள் தற்போது ஓசூர் வனப்பகுதிக்குள் விடப்பட்டுள்ளன. இவற்றை மற்ற யானைகள் கூட்டம் சேர்க்குமா? அல்லது தனியாக இந்த யானைகள் சுற்றுமா? என வனத்துறையினர் கண்காணிக்க உள்ளனர். கடந்த 3 மாதங்களாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மாவட்ட மக்களையும், ஆந்திர மாநில எல்லையோர மக்களையும் அச்சுறுத்தி 6 பேரை கொன்ற யானைகளை மயக்க ஊசி போட்டு பிடித்து வனப்பகுதியில் விடப்பட்டுள்ளதால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.


Next Story