2 யானைகள் கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டியடிப்பு
தளி பெரிய ஏரியில் முகாமிட்டு இருந்த 2 யானைகள் கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டியடிக்கப்பட்டன.
தேன்கனிக்கோட்டை
தளி பெரிய ஏரியில் முகாமிட்டு இருந்த 2 யானைகள் கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டியடிக்கப்பட்டன.
யானைகள் முகாம்
தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட தளி பெரிய ஏரியில் நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 யானைகள் ஆனந்த குளியல் போட்டன. இந்த யானைகளை வனத்துறையினர் பட்டாசு ெவடித்து விரட்டினர். இதையடுத்து 2 யானைகளும் அருகில் உள்ள மாந்தோப்பு வழியாக தைல மர தோப்பிற்குள் சென்றன. இரவு நேரம் என்பதால் யானைகள் விரட்டும் பணி நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் நேற்று காலை யானைகளையும் வனச்சரகர் சுகுமார் தலைமையிலான வனத்துறையினர் ஜவளகிரி வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால் அந்த பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.
தீவிர கண்காணிப்பு
இந்த நிலையில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் ஆந்திர மாநிலத்தில் 6 பேரை கொன்ற 2 யானைகள் திருப்பத்தூர் மாவட்டத்தில் முகாமிட்டு சுற்றித்திரிந்தன. அந்த யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் 2 யானைகளையும் லாரிகளில் ஏற்றி நேற்று முன்தினம் ஓசூர் வனக்கோட்டம் காவிரி தெற்கு வன உயிரின சரணாலயத்தில் பிலிக்கல் வனப்பகுதிக்கு கொண்டு வந்து வனத்துறையினர் விட்டனர்.
மயக்க ஊசி செலுத்தி பிடித்து ஓசூர் வனப்பகுதியில் விடப்பட்ட ஒரு யானை மட்டும் ஆற்றை கடந்து கர்நாடக மாநில வனப்பகுதிக்கு சென்றது.. மற்றொரு யானை எங்கு உள்ளது என்று தெரியவில்லை. அதனால் காவிரி ஆற்று படுகையில் உரிகம் வனச்சரகர் வெங்கடாசலம் தலைமையிலான வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.