விவசாய நிலங்களில் புகுந்து யானைகள் அட்டகாசம்
பாலக்கோடு அருகே விவசாய நிலங்களில் புகுந்து 3 யானைகள் அட்டகாசம் செய்தன.
பாலக்கோடு:
பாலக்கோடு அருகே விவசாய நிலங்களில் புகுந்து 3 யானைகள் அட்டகாசம் செய்தன.
யானைகள் அட்டகாசம்
கிருஷ்ணகிரி மாவட்டம் போலுமலை வனப்பகுதியில் இருந்து உணவு, தண்ணீர் தேடி 3 யானைகள் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கூலன் கொட்டாய் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு வந்தன. இந்த யானைகள் அதேபகுதியை சேர்ந்த சின்னபாப்பன், முனிராஜ், திம்மராஜ், சின்னராஜ் ஆகியோரது விவசாய நிலங்களில் புகுந்து நெல், வாழை, மா, தக்காளி உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்து விட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டன.
இந்தநிலையில் நேற்று காலை விவசாயிகள் தோட்டத்திற்கு சென்றபோது யானைகள் பயிர்களை சேதப்படுத்தி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் பாலக்கோடு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் போலுமலை வனப்பகுதியில் முகாமிட்டு இருந்த 3 யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு அவர்கள் விரட்டினர்.
இழப்பீடு
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், வனப்பகுதியில் இருந்து அடிக்கடி யானைகள் இரவு நேரங்களில் நிலங்களில் புகுந்து நெல், தக்காளி பயிர்களையும், மா, வாழை மரங்களையும் சேதப்படுத்தி வருகின்றன. யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் அச்சமடைகின்றனர். யானைகள் ஊருக்குள் புகாமல் இருக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். யானைகளால் சேதமடைந்த பயிர்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.